நீதித்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை நடந்துகொண் டிருக்கின்ற வேளையில் புங்குடுதீவிலுள்ள பயனற்ற பாழடைந்த கட்டடங்களை இடித்து அழிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உடைந்த கட்டடங்கள், பாழடைந்த வீடுகள், பற்றைகள் என்பன மக்கள் குடியிருப்பதற்கு அச்சுறுத்தலான சூழமைவை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தகைதோர் சூழமைவே மாணவி வித்தியாவின் படுகொலைக்கு சாதகமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது என்ற உண்மை ஏற்புடையதே.

இந்தவகையில் புங்குடுதீவில் இருக்கக் கூடிய பாழடைந்த கட்டடங்கள்,  பயன்படுத்த முடியாத வீடுகளை உடைப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிபதி விடுத்த உத்தரவு சாலப்பொருத்தமான நடவடிக்கையாகும். 
அதற்கு மேலாக புங்குடுதீவு என்ற எல்லை கடந்து வடபுலம் முழுவதிலும் நீதிபதியின் உத்தரவை உள்ளூராட்சி அமைப்புகள் அமுல்படுத்துமாக இருந்தால் அது வரவேற்கப்படக் கூடியதாகும்.

பொதுவில் மக்கள் மீளக்குடியமர்ந்த இடங்களில் பாழடைந்த கட்டடங்களும் பற்றைக்காணிகளும் மக் களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக இருப்பது மறுக்க முடியாத உண்மை.

மீளக்குடியமர்வு நடைபெறும்போது அந்தஇடம் முழுவதும் துப்புரவு செய்யப்படுவது கட்டாயமானதாகும். எனினும் மீளக்குடியமர்ந்தவர்கள் தத்தம் காணித்துண்டுகளை துப்புரவு செய்து அதில் வீடுகட்டி குடியிருக்கின்ற நிலைமையே காணப்படுகின்றது.

அருகில் உள்ள நிலங்கள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன. இதனால் குடியிருப்பவர்கள் பாம்பு மற்றும் விச ஜந்துக்களால் பாதிக்கப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கிறது.
இது தவிர இரவுப் பொழுதுக்குப்பின் ஒரு பயங்கரமான புறச்சூழலில் தாம் குடியிருப்பதை அந்த மக்கள் உணர்கின்றனர். இதனால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் ஒரு பயந்த மனநிலையில் வாழ்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை இதில் உள்ளது.

எனவே மீளக்குடியமர்ந்த இடங்களில் இருக்கக் கூடிய காணிகள் யார்? யாருக்கு? சொந்தமோ அவர்கள் தமது காணிகளை துப்புரவு செய்து வேலியிட்டு மற்றவர்களின் இயல்பு வாழ்வுக்கு உதவ வேண்டும்.
இதைவிடுத்து வீடுகட்டி குடியிருப்பதாக இருந்தால் மட்டுமே காணியை திருத்த முடியும்; குடியிருக்கா விட்டால் காணி திருத்தவேண்டிய அவசியம் என்னவென்ற மனநிலையில் மக்கள் இருப்பார்களாயின் மீள்குடியமர்ந்த மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்பதே பொருளாகும்.

எனவே இது விடயத்தில் நீதிபரிபாலனமும் உள்ளூராட்சி அமைப்புகளும் தலையிட்டு மீளக்குடியமர்ந்த இடங்களில் உள்ள அனைத்துக்காணி உரிமையாளர்களும் தத்தம் காணிகளிலிருக்கக் கூடிய பயன்பாட்டிற்கு பொருந்தாத கட்டடங்களை இடித்து அழிப்பதுடன் காணிகளில் இருக்கக் கூடிய பற்றைகளை அழித்து நிலத்தைத் துப்புரவாக வைத்திருப்பதற்கும், துப்புரவு செய்யப்பட்ட காணிகளில் பயிர்ச்செய்கை அல்லது பயன்தரு மரங்களை நாட்டி உரிய காணியை பிரயோசனமிக்கதாக மாற்றுதல் என்ற நிலைமைக்கு ஆளாக்க வேண்டும்.

இத்தகையோர் செயற்பாட்டை முழு இடங்களிலும் செய்கின்றபோது அதனால் நோய்த்தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்பதுடன் புங்குடுதீவில் நடந்த கொடூர சம்பவங்கள் மேலும் தொடர்வதற்கான சந்தர்ப்ப சூழல்களும் தவிர்க்கப்படும் என்பதால் இது விடயத்தில் அதீத கவனம் செலுத்துவது கட்டாயமானதாகும்.

எனவே இது விடயத்தில் உள்ளூராட்சி அமைப்புகள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். மேலாக வட புலத்திலுள்ள பற்றைக்காணிகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்கள் தொடர்பில் வடக்கு மாகாணசபை இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila