
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளக பொறிமுறையின் இறுதி வடிவம், எதிர்வரும் மே மாதம் இறுதிக்குள் தயாராகுமென தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரில், அதன் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். இந்நிலையில், அதற்கு முன்னதாக உள்ளக பொறிமுறையின் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்காக அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளக பொறிமுறை குறித்து ஏற்கனவே அரசாங்கம் அடிப்படை திட்டமொன்றை தயாரித்துள்ளது. குறித்த திட்டத்தில், காணாமல் போனோர் தொடர்பான விசாரணை அலுவலகம், நீதித்துறை, நட்டஈடு வழங்கும் செயற்பாடுகள் என்பன உள்வாங்கப்பட்டுள்ளன. உள்ளக பொறிமுறை விசாரணைக்கென அமைக்கப்பட்ட விசேட செயலணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு என்பன இதுகுறித்து தற்போது தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இறுதி வடிவம் பெறும் அறிக்கையுடன் ஐ.நாவின் 32 ஆவது அமர்வுக்கு செல்லும் இலங்கையின் தூதுக்குழு, உள்ளக பொறிமுறை குறித்து அங்கு விளக்கமளிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது. இலங்கை குறித்து ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் சர்வதேச நீதவான்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் உள்ளடக்கப்படவேண்டுமென பரிந்துரைக்கப்பட்ட போதும், இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறை என்ற தமது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. அண்மையில் இலங்கை வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், வெளிநாட்டு நீதவான்களின் தலையீட்டுடனான விசாரணை அவசியம் என்றும், எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையிலும் உள்ளக விசாரணை அமையுமாயின் அதனை ஏற்றுக்கொள்ளலாமெனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.