
மத்திய அரசு எம்முடன் பேசுவது போல் காட்டிக்கொண்டு திட்டமிட்டவாறு தங்களது நடவடிக்கையினை மேற்கொள்கிறது. வடமாகாண சபையையும் மக்களையும் பிரித்தெடுக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது என வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வட மாகாண சபை மூன்று தினங்கள் விவசாய கண்காட்சியை மன்னார் உயிலங்குளம் விவசாய பயிற்சி நிலையத்தில் நடத்தியபோது இதன் ஆரம்ப நாளன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
மத்திய அரசானது எங்களுடைய எந்தவிதமான ஆலோசனையினையும் பெறாமல் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு அரசாங்கத்தினால் விரைவில் வடக்கில் இறப்பர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என்று செய்தி அறிக்கைகள் விடப்பட்டுள்ளது.
எனவே எங்களை பொறுத்தவரையில் மாகாண சபை என்று ஒன்று இங்கு இருக்கின்றது. எங்களிடமும் தகுதிவாய்ந்த திறமைமிக்க ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.
எங்களை புறந்தள்ளி தாங்களாகவே சில செயற் திட்டங்களில் ஈடுபட்டு அதற்கு பின்னால் வரப்போகும் பாதகமான விளைவுகளை எல்லாம் எங்கள் தலையில் கட்டிவிடும் ஒரு அபாயகரமான சூழ்நிலையில் தான் இந்த வடக்கு மாகாணம் இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டவே மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகின்றது.
மக்களிடம் மிருந்து எங்களை அன்னியப்படுத்துவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை குறிப்பிடுவது இங்கு பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அண்மையில் முதலமைச்சருடைய தலைமையில் பிரதமரை சந்தித்திருந்தோம். அந்த சந்தர்ப்பத்தில் வடக்கு, கிழக்கில் அறுபத்தையாயிரம் வீடுகள் கட்டப்படுவது தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சரினால் பிரஸ்தாபிக்கப்பட்டது. எங்களது தரப்பில் இருக்கக்கூடிய சில அதிருப்திகளை இந்த வீட்டுத்திட்டம் தொடர்பாக எமது முதலமைச்சரினால் தெரியப்படுத்தப்பட்டது.
அப்போது ஒரு இணக்கம் எட்டப்பட்டது. எங்களுடைய அனுமதியில்லாமையே இரண்டு வீடுகள் கட்டப்பட்ட நிலையில் அந்த வீடுகளை நாங்கள் பார்த்து அதற்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று ஒரு கருத்துநிலை எட்டப்பட்டது.
ஆனால் மூன்றாவது வீடும் எங்களுக்கு தெரியாமல் கட்டப்படுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த வீட்டிற்கான கட்டுமான பொருட்களை பெற்றுகொண்டவர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆகவே உப்புக்கு சப்பாக எங்களுடன் பேசுவது போல் ஊருக்கு காட்டிக்கொண்டு தாங்கள் திட்டமிட்டவாறு தங்களது நடவடிக்கையினை இந்த அரசாங்கம் மேற்கொள்கிறது என்றுதான் நான் கருதுகின்றேன்.
உண்மையில் மக்களுக்கான பிரதிநிதிகள் நாங்கள், மக்களினுடைய கொள்கை சார்ந்த முடிவுகளையும் நாடுதழுவிய அல்லது மாகாணம் தழுவிய முடிவுகளை எடுப்பதற்கும் தான் எங்களுக்கான முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
மத்திய அரசாங்கத்தினுடைய ஒரு திட்டம் தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செய்கின்ற போது நீங்கள் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் மக்களிடம் சென்று மக்களின் அபிப்பிராயத்தின் பேரில் நாங்கள் செய்கின்றோம் என்று சொல்லி தமிழ் தினசரிகளிலும் கவர்ச்சிகரமான இந்த வீட்டுத் திட்டத்தை படம் போட்டு மக்களின் அபிப்பிராயம் கோரப்படுகிறது. இதானல் நாங்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றோம் என்றார்.