முப்படைகளின் தடை ஜனநாயகத்திற்கு சவால்!

இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் கடந்த வியாழக்கிழமை திருகோணமலை சென்றிருந்த போது கிழக்கு மாகாண சபையில் நடந்த சந்திப்பு மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பங்கேற்ற நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவைக் காண முடியவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. வழக்கத்தில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விருந்துபசாரம் அளிப்பது ஆளுநர் தான். ஆனால் சிங்கப்பூர் வர்த்தகருக்கான விருந்துபசாரம் திருகோணமலை கடற்படைத் தளத்தில் வழங்கப்பட்டது. அந்த விருந்துபசாரத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட்டும் கலந்து கொண்டார். சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் மீது முப்படைகளும் கடந்த 26ம் திகதி தடை ஒன்றை விதித்திருந்தன. தமது முகாம்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை அனுமதிப்பதில்லை என்றும், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிப்பது என்றும் முப்படைகளின் தளபதிகளால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.மிகவும் சிக்கலான அந்த முடிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக முப்படைகளும் எடுத்த அந்த முடிவு நிலைமைகளைப் பாரதூரமாக்கும் சூழலையும் ஏற்படுத்தியது. முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாத சூழலில் அரசியல் தலைமையுடன் கலந்தாலோசிக்காமல், முப்படைகளும் தன்னிச்சையாகவே முடிவெடுத்த முதல் சம்பவமாக அது கருதப்படுகிறது.கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவே இந்த முடிவை முதலில் எடுத்திருந்தார். கடற்படை அதிகாரியை அவமதானப்படுத்திய கிழக்கு மாகாண முதலமைச்சசரை கடற்படை முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிப்பதென்றும் கடற்படை தளபதி எடுத்த முடிவை, இராணுவ, விமானப்படைத் தளபதிகளும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.அவர்கள் தமது முடிவை பாதுகாப்புச் செயலாளரான கருணாசேன ஹெட்டிஆராச்சியிடம் தெரிவித்தனர். அவரும் அதற்கு இணங்கியே கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நடைமுறைப்படுத்தவுள்ள தடைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். பாதுகாப்பு அமைச்சின் சார்பில் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாகவே அவர் கூறியிருந்தார். எனினும் பாதுகாப்புச் செயலாளரும் கூட முப்படைத் தளபதிகளைப் போன்ற ஒரு அரசாங்க அதிகாரி தான். அரசியல் தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கவில்லை. ஆனாலும் முப்படைத் தளபதிகளின் முடிவுக்கு தலையசைத்து அந்த முடிவை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்திருந்தார் பாதுகாப்புச்செயலர். ஒரு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முப்படைகளும் ’புறக்கணிப்பு மற்றும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகவே பார்க்கப்பட்டது. உடனடியாகவே பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைத் தளபதிகளையும் அழைத்துப் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டு நிலைமையைச் சிக்கலாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பும் வரை பொறுமையாக இருக்கும் படியும் கேட்டுக்கொண்டார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்ட பின்னரும் கூட பாதுகாப்புச் செயலர், கடற்படைப் பேச்சாளர் ஆகியோர் சில விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.நிலைமைகள் மோசமடைவதை தடுக்கவே எல்லோருடைய நன்மை கருதியும் தான் கிழக்கு மாகாண முதல்வருக்கு எதிரான தடையை விதிக்கும் முடிவை எடுத்ததாக பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டிஆராச்சி பிபிசிக்கு தெரிவித்திருந்தார். அதேவேளை நிலைமைகள் மோசமடைவதற்கு முன்னரே ஜனாதிபதி நாடு திரும்பியிருந்தார். உடனடியாக அவர் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முப்படைகளையும் தமது முடிவுகளை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். எனினும் அதுபற்றிய எந்தச் செய்திகளும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி பயன்படுத்த தொடங்கியிருந்தது.படைத்தரப்புக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது என்ற தோற்றப்பாட்டை எதிரணி ஏற்படுத்தி விடும் என்பதே அரசாங்கத்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது. பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே அறிவிக்கப்பட்ட கிழக்கு முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கை பற்றிய முடிவு பின்னர் ரத்துச் செய்யப்பட்டமை பற்றி பாதுகாப்பு அமைச்சு வாய்திறக்கவில்லை. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவும் கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவியும் தான் அதனை அறிவித்தனர். இனிமேல் முப்படை முகாம்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுமதிக்கப்படுவார் என்றும், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் முப்படையினரும் பங்கேற்பர் என்றும் அவர்கள் அறிவித்திருநதனர். அதேவேளை கிழக்கு முதல்வர் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரிய பின்னரே அவர் மீதான தடை நீக்கப்பட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கடற்படைப் பேச்சாளர் கூறியிருக்கிறார். ஆனாலும் கிழக்கு முதல்வர் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரிய சம்பவம் நடந்ததாகத் தெரியவில்லை. சம்பூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே கிழக்கு முதல்வர் நஷீர் அஹமட் கடிதம் எழுதியிருந்தார். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு அந்தக் கடிதம் எழுதப்பட்ட நிலையில், அவருக்கு கீழுள்ள கடற்படைக்கும் அத்தகைய கடிதத்தை அனுப்ப வேண்டிய தேவை அவருக்கு இல்லை. எவ்வாறாயினும் மோசமான நிலைமைகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பிரச்சினையை அரசாங்கம் ஒருவாறு சமாளித்து கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்தவே கிழக்கு கடற்படைத் தளத்தில் சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரனுக்கு மதிய போசன விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டு கிழக்கு முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சம்பூர் சம்பவம் அமெரிக்கத் தூதுவர் முன்பாகவே நடந்திருந்தது. அதுபோலவே சிங்கப்பூர் அமைச்சருக்கு அளித்த விருந்துக்கு கிழக்கு முதல்வரை அழைத்து எல்லாமே வழமைக்கு வந்துவிட்டது என்று காட்ட முனைந்திருக்கிறது அரசாங்கம். ஆனாலும் இவற்றோடு இந்த விவகாரம் முடிந்து போய் விட்டதாக கருத முடியாது. ஏனென்றால் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முப்படைகளும் அரசியல் ரீதியான முடிவு ஒன்றை எடுக்கும் அளவுக்கு சென்றதை அவ்வளவு சாதாரணமான விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது. அரசாங்கத்திற்குள் இருக்கும் அமைச்சர்கள் பலருக்கும் முப்படைகளின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இது ஜனநாயகத்திற்கு பெரியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியை முப்படைகள் புறக்கணிப்பதும், அவருக்குத் தடை விதிப்பதும் இராணுவ ஆட்சி நடக்கும் நாடு ஒன்றில் தான் நடக்கக் கூடியது. அத்தகையதொரு நிலைக்கு இலங்கை சென்று விட்டதா என்று தான் இந்தச் சம்பவம் கேள்வியை எழுப்ப வைத்தது.பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டிஆராச்சியே இந்த முடிவை முதலில் எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் முப்படைத் தளபதிகளுமே இந்த முடிவை தன்னிடம் தெரிவித்தனர் என்றும் அதற்குத் தாம் உடன்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அந்த முடிவுக்கு இணக்கம் தெரிவித்த அவர் பின்னர் அந்த முடிவைத் தான் எடுக்கவில்லை என்று நழுவிக் கொள்ளவும் முயன்றார். எவ்வாறாயினும் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக அரசாங்கத்தினால் நிம்மதி அடைய முடியாது. ஏனென்றால் வீங்கிப் பருத்துப் போயுள்ள ஒரு படைக் கட்டமைப்பை வைத்துள்ள நாடு, தனது படையினருக்கு கூடுதல் முக்கித்துவத்தையும் அதிகாரங்களையும் வழங்கிய ஒரு நாடு எதிர்கொள்ளும் பிரச்சினை தான் இது. சர்வ வல்லமை கொண்டவர்களாக எல்லா அதிகாரங்களும் பெற்றவர்களாக கடந்த காலங்களில் படையினர் இருந்தனர். அந்த நிலைமையை மாற்ற முனையும் போது அவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவதும் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்ற முனைவதும் உலக வழக்கமாக இருந்து வந்துள்ளது.இலங்கையின் முப்படைகளும் அரச நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு நடந்தாலும் அதனையும் மீறி அரசியல் ரீதியாகவும் முடிவெடுக்கும் திராணியைக் கொண்டுள்ளன என்பதை அனுபவ பூர்வமாக அறிந்து கொண்ட பின்னரும் அரசாங்கத்தினால் நிம்மதியாக இருக்க முடியாது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு இருக்கப் போகும் முக்கியமானதொரு சவால் தான்


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila