நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது நல்லாட்சிக்கான சவால்கள்!

maithripala-sirisena123நல்லாட்சி அரசாங்கத்தின் அன்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் பலவிதமான விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு இருக்கின்றது.

கடுமையான பிரயத்தனங்களுக்குப் பிறகு சீனாவுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிடம், போர்ட் சிட்டியை மீண்டும் தொடர்வது, வேலைகளை நல்லாட்சி அரசாங்கம் தடுத்ததால் ஏற்பட்டிருந்த இழப்புக்களுக்கு இலங்கை அரசாங்கம் நஷ்ட்ட ஈட்டைச் செலுத்துவது உட்பட பல வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்ட பிறகு 70 பில்லியன் டொலர்களை இலகுக் கடன் அடிப்படையில் வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்திருந்தது.
நல்லாட்சி அரசுக்கு முன்னர் இந்தியா 500 பில்லியன் டொலர்களை வழங்கியதும், தற்போது சீனா வழங்கியிருப்பதும்தான் இதுவரை கிடைக்கப்பெற்ற பெரிய உதவிகளாகும். இந்த உதவிகள் இலங்கையின் நெருக்கடியை சமாளிப்பதற்கு போதுமானதாக இல்லை.
நிதி அமைச்சு நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் திட்டங்களில் வரிகளை அதிகரிப்பதற்கு திட்டமிட்டு அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் திட்டத்தை முன்வைத்தது. அதில் வற் வரியை அதிகரிப்புச் செய்வதை பிரதான திட்டமாக குறிப்பிட்டது. அதாவது தற்போது 12.வீதமாக இருக்கும் வரியை 15 வீதமாக அதிகரிக்க பரிந்துரை செய்தது.
எதிர்பாராத விதமாக நிதி அமைச்சின் இந்த அறிவிப்பை முதலில் எதிர்த்தும், விமர்சித்தும் கடுமையான தொணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்த கருத்துக்கள் நாட்டு மக்களுக்கு வியப்பாகவே இருந்தது. வற் வரியை அதிகரிக்க அனுமதிக்க முடியாது. அத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும், நாட்டு மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துவதையும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இறுதியாக வரி அதிகரிப்புத் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப்போல், எதிர்காலத்தில் நிதி அமைச்சு மற்றும் அதனோடு சார்ந்த திட்டங்களை மூவர் கொண்ட குழுவாக கலந்துரையாடியே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதோடு, அந்தக் குழுவில் ஜனாதிபதியும், பிரதமரும், நிதி அமைச்சரும் உள்ளடங்குவார்கள் என்றும் கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதி இவ்வாறு கூறியதை ஆராய்ந்து பார்த்தால், ஜனாதிபதிக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தாமல் நிதி அமைச்சு திட்டமிட்டதா? அல்லது ஜனாதிபதி இவ்வாறான திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமரின் தனித்த தீர்மானமாகவும், நிதி அமைச்சின் இரகசிய திட்டமாகவும் பார்க்கின்றாரா? அல்லது நல்லாட்சி அரசாங்கம் வெளியே ஒற்றுமையாக இருப்பதுபோல் பாசாங்கு செய்து கொண்டு உள்ளுக்குள்ளே இரண்டு அணியாக செயற்படுகின்றதா? என்ற சந்தேகங்களைக் கொடுக்கின்றது.
இந்தச் சந்தேகத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்னொரு அரசியல் சர்ச்சையும் கடந்தவாரம் நடந்திருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்தும், பிரதி அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவர்களுமாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
அவர்கள் ஒன்றாகக் கூடியபோது, அரசுக்குள் தாம் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியானது பிரதமரின் தனித்த வழி நடத்தலில் கூட்டுப் பொறுப்பை புறக்கணித்து நடப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியும் ஜனாதிபதிக்கு நல்லாட்சி அரசை முன்னகர்த்துவதில் புதிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. மறுபக்கத்தில் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான பொது எதிரணியினர் தமக்கான புதிய அலுவலகம் ஒன்றை அமைத்து அரசுக்கு எதிரான வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கின்றார்கள்.
ஒருவேளை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியை தொடர முடியும் என்ற ஊகங்கள் இருக்கின்றபோதும், இன்னொரு முயற்சியாக மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தியும் ஆட்சியை தொடர வாய்ப்புக்கள் இருக்கின்றது.
எனவே நல்லாட்சி அரசிலிருந்து அவசரப்பட்டு சுதந்திரக்கட்சி வெளியேறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இருக்கின்றது.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையை ஆதரித்து இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினரோ தாம் புதிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துக்களை கூறிவருகின்றார்கள்.
தாம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக பொது எதிரணி உட்பட ஒற்றுமையான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை கட்டியெழுப்புவதோடு, ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அதிருப்தியாளர்கள் உட்பட சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்மோடு இணைத்துக் கொள்ளமுடியும் என்றும் கூறுகின்றார்கள்.
இந்தக் கருத்து வலுத்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20பேரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைத்துக் கொண்டு புதிய அரசை அமைக்க முயற்சிக்கப்படுமானால், தாங்கள் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியை இணைத்துக் கொண்டு பலமான ஆட்சியை அமைக்க ஏன் சமரசம் செய்யக்கூடாது? என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பகுதியினர் சிந்திக்கின்றனர்.
இவ்வாறான குழப்பங்களுடனும், நம்பிக்கையீனங்களுடனும் நல்லாட்சி அரசாங்கம் தற்போது நகர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படியே நீண்ட பயணத்தை நல்லாட்சி அரசால் தொடர முடியுமா என்பது கேள்விதான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக முணுமுணுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த அரசியல் திரை கிழிந்து விடயம் வெளிப்படுகின்றபோது, அதை மூடி மறைக்க முடியாத கட்டத்தை அடைந்துவிடும். அத்தகைய நெருக்கடி நிலைமை ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது ஜனாதிபதிக்கு மேலுமொரு அழுத்தமாக உருவாகியுள்ளது.
நல்லாட்சி அரசு குழைந்துபோனால் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும், கவலை கொள்ளவேண்டிய தரப்பாக இருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாதான். ஏன் என்றால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருப்பதை எவரும் ஒன்றும் செய்யமுடியாது என்றபோதும், தனது அரசியல் எதிராளிகள் மீண்டும் தலைதூக்கிவிடும் ஆபத்தை தடுக்க முடியாமல் போய்விடும் என்ற அச்சம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.
இந்த பதற்றங்களுக்கு நடுவே இன்னொரு அரசியல் புயலும் இலங்கையை மையம் கொண்ட வண்ணமே இருக்கின்றது. அந்தப் புயல் வீசினால் சிறி லங்கா சுதந்திரக் கட்சி சிதைந்து இரண்டாகப் பிளவு பட்டுவிடும். அதற்கான வாய்ப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. பெரும்பாலும் எதிர்வரும் தொழிலாளர் தினத்தை இரு அணிகளாக இவர்கள் அனுஷ்டிக்க இருப்பதால் மையம் கொண்டிருக்கும் புயல் வீசலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது.
அதுவும் நடந்தால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரகாசமான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும். பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் அரசியல் பலாபலனின் அடிப்படையில் அவர் ஆட்சியில் இருந்தால் நம்ப முடியாத கட்சிப்பிளவுகள் இடம்பெறுவது வழமையாகும். அந்த சாஸ்திர நம்பிக்கைக்கு இம்முறை பலியாகப்போவது சுதந்திரக் கட்சியாக இருந்தால் யாரால் தடுக்க முடியும்?
– ஈழத்துக் கதிரவன்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila