
வட மாகாணத்தில் கடந்த காலங்களை பார்க்கிலும் திடீரென குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், குறித்த குற்றச்செயல்களின் பின்னணியில் யார் செயற்படுகின்றனர் என்பது குறித்து ஆராய்ந்து, குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் குறித்து, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு வடக்கு முதல்வர் அனுப்பிவைத்துள்ள அவசரக் கடிதத்திலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ‘வட மாகாணத்தில் களவுகள், கொள்ளைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. அத்துடன் வட மாகாணத்திற்கு சிங்கள மக்களை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேரூந்து தாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பின்னணி என்ன, உள்நோக்கம் என்ன என்பது உடனே அறியப்பட வேண்டும். நல்லுறவைப் பேண அரசாங்கம் முனைந்திருக்கையில், இவ்வாறான நடவடிக்கைகள் அவற்றை முடக்கும் தன்மையுடையனவாக அமைந்துள்ளன. கடந்த 23ஆம் திகதி, யாழில் ஒரே இரவில் ஐந்து கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. இவை இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னோடியாக நிகழ்கின்றனவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன? நாங்கள் யாவரும் சேர்ந்து போருக்குப் பின்னரான எமது மக்களின் பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்தவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். எனவே இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிபரின் முழுமையான உதவியையும் அனுசரனையையும் கோருகின்றோம்’ என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள இராணுவத்தை தளர்த்த வேண்டுமென தமிழ்த் தரப்பினர் மற்றும் வட பகுதி பொதுமக்கள், அரசாங்கத்திடம் தொடர்ச்சியான கோரிக்கைகயை முன்வைத்து வருகின்ற நிலையில், திடீரென தலைதூக்கியுள்ள குற்றச்செயல்கள், மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் இதுகுறித்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை, நாளை யாழ்.கச்சேரியில் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்டமொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.