
கடத்தப்பட்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதியான ராம் எனப்படும் ஹரிச்சந்திரன், பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய ராம், அம்பாறை திருக்கோவில் – தம்பிலுவிலிலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் இரு அதிகாரிகளே நேற்றைய தினம் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டனர். கைதுசெய்யப்பட்டதன் காரணம் குறித்து வினவியபோது, சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டதாகவும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, கடந்த 2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட ராம், கடந்த 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது திருக்கோயில் பிரதேசத்தில் விவசாயம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.