எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரிவினைவாதத்தைத் தூண்டி ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதாகக் கூறி பொதுபலசேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன. இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத இனவாத அமைப்புகளான பொதுபலசேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புகள் மீண்டும் நாட்டில் குழப்பதையும் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றன.
அதன் ஓர் அங்கமாகவே எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் ஆகியோரை கைது செய்யுமாறு மேற்குறிப்பிட்ட இனவாத அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தற்போது ஆட்சியிலிருக்கும் நல்லாட்சி அரசில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகள் தமிழ் தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீது மீண்டும் இனவாத சாயம் பூச முற்படுகின்றன. இவ்வாறானவர்கள் சில காலம் அமைதியாக இருந்தாலே நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என தெரிவித்துள்ளார்.