
வடமாகாணத்தின் சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு அதிகரித்து வருவதை வன்மையாக கண்டிப்பதாக வடபிராந்திய கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இராணுவ மயமாக்கலை அகற்றுவது இன்றைய அவசரத் தேவையாக உள்ளது என்றும் வடபிராந்திய கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கிராம சேவகர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் அந்த ஒன்றியம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
வடபிராந்தியத்தில் எந்தவித அனுமதியும் இன்றி அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்களும், இராணுவத்தினதும் பொறுப்பற்ற நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவது அறத்துக்கு மாறானது என்றும் இது நல்லிணக்கம் நடைமுறைக்கு பொருத்தமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தை அகற்றுவதன் மூலம் தான் இப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரலாம். இராணுவத்தலையீடின்றி அரச சிவில் நிர்வாகம், அரச அதிபர், பிரதேச செயலாளர், கிராமசேவை அலுவலர், பொலிஸ், நீதிமன்றம் என இயங்குவது உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம், வவுனியா கிறிஸ்தவ ஒன்றியம், வன்னி கிறிஸ்தவ ஒன்றியம், வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த வடபிராந்திய கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.