எங்கள் இளைஞர்களை குறை கூறுவது நியாயமா?


புத்தாண்டின் பிறப்பை ஒட்டி நேற்று முன்தினம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பட்டிமன்ற நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வெளியரங்கில் நடைபெற்ற இப்பட்டிமன்ற நிகழ்வுக்கு இந்தியா வில் இருந்து பட்டிமன்றப் பேச்சாளர்கள் ராஜா, திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

பட்டிமன்றத்தை பார்ப்பதற்கு ஏகப்பட்ட மக்கள் குழுமியிருந்தமைதான் இங்கு கவனத்துக்குரிய விடயம். அதிலும் இளைஞர்களே அதிகம் என்பது மிகவும் கவனத்துக்குரியது. 

இதற்கு மேலாக பட்டிமன்றத்தை பார்ப்பதற்காக வந்தவர்கள் பட்டிமன்றத்தில் பேசப்பட்ட விடயங்களை மிகவும் உன்னிப்பாக செவிமடுத்தமை தமிழகத்தில் இருந்து வந்த பேச்சாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த ஆச்சரியம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கும் விலக்கல்ல,

இந்த வகையில் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்த இந்தியத் துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் அவர்களும் அவர்சார்ந்த உத்தியோகத்தர்களதும் முயற் சிக்குப் பெருவெற்றி கிடைத்தது எனலாம்.
இவற்றின் மத்தியில் நாம் சொல்வதெல்லாம் எங்கள் மண்ணுக்கு இப்படியான நிகழ்வுகள், கலை வெளிப்படுத்தல்கள் தேவை என்பதுதான். 

எந்தக் கலை நிகழ்வும் இல்லாத ஒரு சூழ்நிலையில்-திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களங்கள் அமையாத கட்டத்தில் எங்கள் இளைஞர்களின் போக்குகள் திசைமாறும் என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

எங்கள் இளைஞர்களுக்கான வழிப்படுத்தலை; ஆற்றுப்படுத்தலை; அறிவுரைத்தலை நாம் செய்து கொடுக்காமல் விட்டு விட்டு அவர்கள் பாதை மாறிச் செல்கின்றனர் எனக் குற்றம் சாட்டுவது எந்த வகையிலும் நியாயமாகாது. 

பொதுவில் இளைஞர்களை, மாணவர்களை வழிப்படுத்துவதென்பது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் ஊடாகவே இடம்பெற வேண்டும். அதுவே நல்ல ஊடகமாக இருக்க முடியும். 

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்த்திறன் எங்கள் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கக்கூடி யது. இதற்குக் காரணம் எங்கள் இளைஞர்கள் அறிவுத்தேடல் மிக்கவர்கள். எதையும் வாதப் பிரதிவாதம் செய்து அதில் இருந்து ஒரு பொதுவான கருத்து நிலைக்கு வரக்கூடியவர்கள்.

இதனால்தான் யாழ்ப்பாண மண் என்று பொது வில் கூறப்படும் ஒட்டுமொத்த தமிழர் தாயகமும் அறி வுடைப் பூமியாகப் போற்றப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில்தான் மேன்மைத்தமிழ் உள் ளது என்று தமிழகத்துப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் கூறியபோது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த கரகோ­ம் எங்கள் இளைஞர்களுக்கு எத்துணை பெருமையைக் கொடுத்தது.

இதுபோன்ற கலை நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்குக் கிழக்கு எங்கும் நடைபெற வேண்டும். இதன்மூலம் எங்கள் இளம் சமூகத்துக்கு நிறைந்த அறிவியல் கருத்துக்களும் ஆன்மீக சிந் தனைகளும் ஊட்டப்படும். இஃது எங்கள் இளைஞர்களை நிச்சயம் வழிப்படுத்தும் இப் பணியை தொடர்ந்து செய்வதற்கு  அகில இலங்கை கம்பன் கழகம், இந்தியத்துணைத் தூதரகம் மற்றும் கலைத்துவப் பணி செய்யும் அமைப்புகள் முன்வர வேண்டும். இவ்வாறான முன்வருகை எங்கள் மண்ணில் மிகப்பெரிய தொரு சிந்தனை எழுச்சியை உருவாக்கும் என்பது சர்வநிச்சயம். இதற்கு மேற்குறித்த நிகழ்வில் எங்கள் இளைஞர்கள் நடத்திய மங்கள வேள்வி சாட்சியமாகும்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila