வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், அமைச்சர்கள் ஆகியோரினை மாற்றுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் முதலமைச்சரோடு கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த எதிர்கட்சி தலைவர் பல உள்ளக சந்திப்புக்களை நடத்தியிருந்தார். இதன் போது வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
வடக்கு மாகாண அமைச்சர்களை மாற்றக்கோரி மாகாண சபையின் பதினாறு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்று கையளித்திருந்தனர். இந்த விடயம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சித் தலைவரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
வடக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தல் 21.09.2013 அன்று நடைபெற்றது. 11.10.2013 அன்று சத்திய பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டோம். 11.04.2016 அன்று இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்துள்ளோம். மிகுதி இரண்டரை வருடங்களை சிறப்பாக கடப்பதற்கு மேற்படி மாற்றங்களை ஏறுபடுத்தி தருமாறு கோரியும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையில் உள்ள நான்கு அமைச்சர்களும் மாற்றப்பட்டு அதே தகுதியுடைய ஏனைய நான்கு பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது, நான்கு கட்சிகளினது பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
மேற்படி மாற்றங்களுக்கு தேவை ஏற்படின் அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர் பதவிகளையும் புதியவர்களுக்கு வழங்க முடியும், இறுதி யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும். தேர்தல் முடிந்த கையோடு புதிய அமைச்சர்களின் தெரிவின் பின்னர்,
பொறுப்புக்கூறல் பதவிகள் பிரித்து கொடுக்கப்பட்டன, எனினும் இந்த துறைகள் சிறப்பாக இயங்காத நிலையில் அவற்றை நீக்குமாறு தங்களுக்கு ஜமுதலமைச்சருக்குஸ அறிவித்தும் புதிய துறைகள் பிரித்து வளங்கப்படனவே தவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இவற்றை சிறப்பாக இயங்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைகள் நேற்றைய தினமும் சம்பந்தனின் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் தனியே கட்சி முடிவெடுக்க முடியாது எனவும் முதலமைச்சரிடம் பேசியே நடவடிக்கை எடுக்க முடியும்.
எனினும் மாகாண சபை உறுப்பினர்கள் விரும்பினால் அது தொடர்பில் நாம் சாதகமாகத்தான் பரிசீலனை செய்ய வேண்டும். எனினும் முதலமைச்சரிடம் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு என்றார் சம்பந்தன்.
மேலும் வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்டம் சிறந்த முறையில் காணப்பட்டால் அதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.