
ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிக் குற்றப் புலனாய்வு திணைக்களம் விரைவில் நீக்கப்படவுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதிக் குற்றப் புலனாய்வு திணைக்களம் மூடப்படும் பட்சத்தில் அதற்கு இணையாக நிதி மற்றும் பொருளாதார புலனாய்வு அமைப்பு என்ற பிரிவு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படவுள்ளது. அதன்படி நிதிக்குற்றப் பிரிவின் பிரதானியாக செயற்படும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வித்யாலங்கார இந்த புதிய அமைப்பின் பிரதானியாகவும் செயற்படுவார் எனக் கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த திணைக்களம் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.