சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போகும் – வடக்கு முதல்வர் எச்சரிக்கை
நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒன்றிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் சகல ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போகும் எனவும் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையில் இன்று(வெள்ளிக்கிழமை) அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை முன்மொழிவுகளை அறிமுகப்படுத்தி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘குறைமாதக் குழந்தைபோல நாங்கள் உங்கள் முன் சமர்ப்பித்த ஆரம்ப சமர்ப்பணங்கள் நாடளாவிய ரீதியில் பவனிவந்து பலத்த விமர்சனங்களை ஏற்கனவே எதிர்நோக்கியுள்ளன. மூன்று குழுக்கள் அமைத்து அவற்றின் சமர்ப்பணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதே இந்த வரைவு. ஒருவரின் சமர்ப்பணங்களை நாங்கள் கைவிட வேண்டியதாய் இருந்தது. அவர் எமது இறையாண்மை பற்றி ஆவணத்தில் இடப்பெறச் செய்ய வேண்டும் என்று வாதாடினார். இறையாண்மை என்ற கருத்து பல்வேறு கருத்து வேற்றுமைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளடக்கப்பட்டதொன்று. நாடு சுதந்திரம் அடைந்தபோது நாம் எமது இறையாண்மையைத் தனித்துவமாகக் கோராமல் மற்றைய மக்களுடன் கூட்டமாகச் சேர்ந்து இலங்கை மக்களுக்கான இறையாண்மை என்ற கோரிக்கையினுள் அமிழ்த்திவிட்டோம். ஆகவே அது பற்றிப் பேசாமல் சர்வதேச ஒப்பந்தங்களில் காணுமாறு மக்கட் குழாம் தனது தனித்துவத்தைப் பேண எந்தவாறான தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியே இந்த ஆவணத்தைத் தயாரித்துள்ளோம். தந்தை செல்வா போன்றவர்கள் கூறியதையே நாங்கள் இங்கு வலியுறுத்தியுள்ளோம். பிரிவினைக்கு எதிர்மாறான ஒரு கருத்தையே முன்வைத்துள்ளோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.
Related Post:
Add Comments