இரணைமடு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு : ஹக்கீம் (இரண்டாம் இணைப்பு)
இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்வது குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலின்போது, வட மாகாண குடிநீர் பிரச்சினை குறித்து ஆராயப்பட்டதோடு, விசேடமாக இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்வது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்து, குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை இன்றைய கலந்துரையாடலில், மன்னார் மாவட்டத்தின் நிலை தொடர்பில் ஆராயப்படாத காரணத்தால், அடுத்த இரு வாரங்களுக்குள் குறித்த மாவட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கின் குடிநீர் பிரச்சினை : ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல் வட மாகாணத்தில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலொன்று, நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் இக் கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். வடக்கில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இடம்பெறும் இக் கலந்துரையாடலில், இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்வது தொடர்பில் விசேட கவனஞ் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related Post:
Add Comments