தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை படையினர் அபகரிக்கும் செயற்பாடுகள் அடிக்கடி நடந்து வருகின்றன.
பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை படைத்தரப்புக்கு எனக்கூறி காணிகளை அளக்க முற்படுவதும் பொதுமக்கள் திரண்டு அத னைத் தடுப்பதும் என்ற செயற்பாடுகள் இன்று வழமையாகி விட்டன.
பொதுமக்களின் காணிகளை படையினர் அபகரிக்கும் நோக்குடன் அளக்க முற்பட்டாலும் அல்லது படையினருக்கு காணி சுவீகரிப்பு என்ற பெயரில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளக்க முயன்றாலும், பொதுமக்கள் திரண்டு அதனைத் தடுப்பர்.
இதனால் அவர்களின் தொழில் முயற்சிகளும் நாளாந்தப் பணிகளும் தடைப்படும். இது அவர்களின் பொருளாதார நிலைமைகளில் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் மக்களைக் குழப்புவதற்காக அங்கும் இங்குமாக காணி அளப்பு நடக்கிறதா? என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.
எங்கள் காணிகளை படையினர் எங்காவது அளக்கின்றனரா அவ்வாறு அளந்தால் அதனைத் தடுப்பதற்காக நாம் ஒன்றுகூட வேண்டும் என்ற நினைப்புக்களை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி அவர்களின் மனநிலையைத் திசை திருப்பும் திட்டத்தை அமுல்படுத்த காணி அளக்கும் காரியத்தை படையினர் செய்கின்றனர் என்று கூறும் அளவிலேயே நிலைமை உள்ளது.
கடந்த 12 ஆம் திகதி பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடற்படையின் தேவைக்கு என தேவாலயக்காணி ஒன்றை அளக்க முற்பட்டபோது பொது மக்கள் திரண்டு அதனைத் தடுத்துள்ளனர்.
இவ்வாறு பல இடங்களில் படையினரின் காணி அளப்பும் அதனைப் பொதுமக்கள் தடுப்பதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.
இவ்வாறு நடப்பதென்பது படைத்தரப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்றே பொருள்படுத்தும்.
இருந்தும் காணி அளக்கின்ற நடவடிக்கையும் காணி அபகரிக்கின்ற முயற்சிகளும் படையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது எனில்,
வட பகுதியில் இருக்கக் கூடிய படையினர் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களுக்கு துன்பம் இழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற நியதியைச் செய்து கொண்டு இருப்பது போல வும் உணரமுடிகிறது.
எது எவ்வாறாயினும் படையினருக்கான காணி அளப்பு என்ற விடயத்தை நல்லாட்சி முடிவுறுத்த வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொத்திழந்து, சொந்தங்களை இழந்து, செய்தொழில் இழந்து, அடுத்த நேர உணவுக்கு என்ன செய்வது என ஏங்குகின்ற தமிழ் மக்களிடம் யுத்தத்தில் அங்கவீனமாகிப் போனதால் எங்கள் எதிர்காலம் எப்படியாகுமோ என்று ஏங்குகின்றவர்களிடம் போய் அவர்களின் காணியை அளக்க முற்பட, அவர்கள் தங்கள் முயற்சிகளையும் கைவிட்டு காணி அளக்கும் நடவடிக்கையைத் தடுக்க,
அதனால் காணி அளப்பதைக் கைவிட்டு வெளியேறுவது போல படையினர் காட்டாப்புக் காட்டு வதை நிறுத்துவது நல்லது.
சிங்கள படையினர் என்றால் அவர்கள் எக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற நினைப்பை தொடர்ந்து ஏற்படுத்தாமல்,நடந்தது நடந்தாயிற்று இனி படையினர் உங்களுக்கு உதவுவார்கள் என்றவாறு படைத்தரப்பு நேர் மனப்பாங்குடன் செயற்பட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் படையினர் இவ்வாறு நடந்து கொண்டால் உள்ளத்தைச் சுட்ட புண்கள் தற்காலிகமாகவேனும் ஆறிக் கொள்ளும்.