இன விடுதலைக்கான போராட்டத்தின் சரித்திரம் மறக்கப்படக் கூடாது : டெனீஸ்வரன்

deniswaran

இன விடுதலைக்காக போராடி, பல தியாகங்களை செய்து, மொத்த இழப்புக்களின் இறுதிநாளாக காணப்படும் மே 18ஆம் திகதி, இன்று மனித மனங்களிலிருந்து மறைந்து வருவதாகவும், இந்த நிலை நீடிக்காமல் போராட்டத்தின் சரித்திரம், காலம் உள்ளவரை அனைவரது மனங்களிலும் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமெனவும் வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கு அழைப்புவிடுக்கும் முகமாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- ”இன விடுதலைக்காக நாம் செய்த தியாகங்கள் எண்ணிலடங்காதவை. பிறந்த மண்ணையும் மறைந்த உறவுகளையும் மறப்பவர்கள் மனிதருமல்லர், தமிழருமல்லர். அந்த வகையில் எம்மினம் இவ்வுலகில் இருக்கும் வரை நினைவில் வைத்திருக்கவேண்டிய நாளே மே 18. எம்முடைய மனங்களிலிருந்து படிப்படியாக இந்த நினைவுகள் குறைந்துவருவதை தற்போதைய காலத்தில் உணர முடிகின்றது. இந்நிலை தொடருமாயின், நாம் இந்த மண்ணுக்காக சிந்திய இரத்தம், விதைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்கள், எம்மினத்தின் சரித்திரம் தொடர்பில் எமது அடுத்த சந்ததியினர், பிற இனத்தவரிடம் கேட்டு அறியவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். இப்போது எமது பகுதிகளில் கொலை, கொள்ளை, வன்புணர்வுகள் மற்றும் இவற்றிற்கு மேலாக வாள்வெட்டுக் கலாசாரம் அதிகரித்துள்ளது. இவற்றை பார்க்கும்போது, எமது இனம் இன்று எதை நோக்கிப் போகின்றது என்பதை இளைய சமுதாயமே நீங்கள் சிந்திக்கின்றீர்களா? குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில இளைஞர்கள் வாள்வெட்டுக் கலாசாரத்துக்கு அடிமைகளாக மாறிவிட்டார்கள். அன்று சில அநீதிகளையும், குற்றச் செயல்களையும் ஒழிக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் வாளைக் கையில் எடுத்தீர்கள் என்பது எனக்கும் ஏனையவர்களுக்கும் தெரியும். ஆனால் அது இன்று எமது இனத்துக்கு எதிராகவே திரும்பியிருக்கின்றது. இக் குற்றச் செயல்கள் தென்பகுதியினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது என நாம் கூறுவோமாயின், அது எமக்கு நாமே கூறிக்கொள்ளும் பொய்யான வார்த்தைகளாகும். எம்மினத்தின் விடுதலைக்காக நாம் அளவுக்கதிகமாகவே உயிர்களையும், உறவுகளையும் இழந்து நிற்கின்றோம். அவற்றிற்கு அர்த்தம் தேடவேண்டுமெனில் நீங்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டியது வாள்களை அல்ல, ஜனநாயகத்தின் திறவுகோல்களாய் இருக்கின்ற பேனாக்களையும், ஜனநாயக விழுமியங்களையுமே. ஆகவே எதிர்வரும் மே 18ஆம் திகதிக்குப் பின்னர், நம்முடைய மண்ணிலே வாள்வெட்டுக் கலாசாரம் இல்லை என்ற செய்தி இந்த உலகம் முழுவதும் பரவவேண்டும். வாள்களைத் தூக்கி எறிந்துவிட்டு சத்தியத்தோடு வெளியில் வாருங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila