கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய – களுபான தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் 16 பேர் காணாமற்போயிருந்த நிலையில் இதுவரை 14 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் குழந்தை ஒன்றும் ஒன்பது பெண்கள் உள்ளிட்ட 16 பேர் மண்ணில் புதையுண்டதோடு, அவர்கள் அனைவரும் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 9 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை வரை மேலும் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரை தேடி வருவதாகவும் மீட்புப்பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஏனைய லயன் குடியிருப்புகளுக்கு அருகிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதால் 65 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் அருகில் உள்ள பாடசாலையிலும், ஏனைய பொது கட்டடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களும், பாதிப்பை எதிர்நோக்கலாம் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள மக்களுக்கும் பாதுகாப்பான இடங்களில் நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே அந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், அங்கு வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
எனினும் செல்வதற்கு வேறு இடமின்றி அவர்கள் குறித்த லயன் அறைகளிலேயே வாழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைவருமே தமிழர்கள் என்பதால் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அக்கறை செலுத்தவில்லை. மலையகத் தமிழ் அரசியல் வாதிகள் கூட தமது சுயநலத்துக்காக தங்கள் சமூகத்தை மறந்த நிலையில் செயற்படுகின்றனர்.
அதேவேளை புலத்கொஹுபிட்டிய – களுபான தோட்டத்தைப் போன்றே கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஏனைய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனைய சமூகங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்றுக் காணிகள் மற்றும் வாழிடங்கள் அமைத்துக்கொடுக்கப்படுவதாகவும், தோட்ட மக்கள் கைவிடப்படுவதாகவும் சமூக ஆவர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக எட்டியந்தோட்டை, ருவான்வெல்ல, தெஹியொவிட்ட, தெரணியாகல மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய தோட்டப்பகுதிகளில் வாழ்ந்து வரும் சுமார் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு எச்சரிககை விடுப்பதை விடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட மக்கள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும்போது அவர்கள் காணிகளை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையிலேயே அவர்கள் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமென தெரிந்தும் அந்த குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நிலைமை கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டக்குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டதையும் சமூக ஆர்வளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி மீரியபெத்தவில் அமைந்திருந்த தோட்டக்குடியிருப்புகளில் ஏற்பட்ட மண்சரிவில் 30ற்கும் உயிரிழந்திரருந்தனர்.
இந்நிலைமையில் அந்த அனர்த்தம் இடம்பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே அந்த மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்தல் விடுத்திருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
எனினும் அந்த மக்களும் செல்வதற்கு வேறு இடமின்றி அந்த பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்த நிலையில் குடியிருப்புகள் மண்ணில் புதைந்ததோடு 30 பேர் வரையில் பலியாகினர்.
உயிர்தப்பிய மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகள் இன்றுவரை முழுமை பெறாத நிலையில் பலர் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
பலர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒருசில வீடுகளை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுததிருந்தாலும் அது முழுமைபெறவில்லை, தற்போதைய அரசாங்கமும் ஏழு பேர்ச் காணியில் வீடுகளை அமைப்பதாக குறிப்பிட்டிருந்தாலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான பணிகளும் நிறைவுசெய்யப்படவி்ல்லை என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.