“கொழும்பு பரபரப்பு” முடிவுக்கு வருவது எப்போது?


K.K

உள்ளுராட்சி மன்றங்களுக்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் மைத்திரி – ரணில் கூட்டாட்சியில் கலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமா என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இனித் தொடரப்போவது ஐ.தே.க. அரசாங்கமா அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இரண்டு தரப்புக்களுமே தனியான அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சி செய்தாலும், இருவருக்கும் உள்ளது ஒரே பிரச்சினைதான். அதாவது, இருவருக்குமே தனியான அரசை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லை. 
‘நல்லாட்சி’ என்ற பெயரில் 3 வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை அமைத்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இப்போது தனித்தனியான பாதைகளில் செல்வதற்கு முற்படுகின்றன. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மற்றொரு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்  என மகிந்த ராஜபக்‌ஷவின் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன கோருகின்றது. ஆனால், உடனடியாக பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் இல்லை. அதேபோல பிரதமரை மாற்றுவதற்கான சாத்தியமும் இல்லை. என்றாலும் கூட, அரசாங்கத்தில் அதிரடியான மாற்றங்களை அடுத்துவரும் நாட்களில் காணக்கூடியதாக இருக்கும்.
ஐ.தே.க. தனியான அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதில் அதிகளவுக்கு அக்கறை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்களே இவ்விடயத்தில் தீவிரமாக இருந்தார்கள். தனியான ஐ.தே.க. அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதில் ரணில் அவசரம் காட்டாமைக்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று: நல்லாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததது தான்தான் எனப் பெயர் எடுக்கக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கலாம். இரண்டு: தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வரப்போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருப்பது. மூன்று: தனியாக அரசாங்கத்தை அமைப்பதானால், 113 எம்.பி.க்கள் தேவை. அவரிடம் இருப்பதோ 106 தான்.
ஆபத்தான நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றாலும் கூட, அதனைப் பகிரங்கமாகக் காட்டும் நிலையில் ரணில் இல்லை. அவ்வாறு காட்டிக்கொள்வது அவருக்குப் பாதகமாக அமைந்துவிடலாம். அத்துடன், கூட்டமைப்பின் தலைமையும் அதனை விரும்பவில்லை. இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டுதான் தாம் தனித்து ஆட்சி அமைக்கப்போவதாக ஐ.ம.சு.மு. அறிவித்தது. கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்ற நிலை, பிளவுபட்ட மகிந்த, மைத்திரி அணிகளை இணைப்பதில்தான் போய்முடியும் நிலையில் உள்ளது. ‘நல்லாட்சி’ எதற்காக அமைக்கப்பட்டதோ அதற்கு முற்றிலும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரி செயற்படுவதைத்தான் காணமுடிகின்றது. ராஜபக்‌ஷவுக்கு அவர் தூது அனுப்பியிருப்பது அவரது பலவீனமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடத்தப்பட்டிருக்க வேண்டும். எல்லைமீள நிர்ணயம் என்ற பெயரில் தேர்தல் தாமதப்படுத்தப்பட்டமைக்கான காரணம் இரகசியமானதல்ல. மகிந்தவின் மீளெழுச்சி தனது தலைமைக்கு அச்சுறுத்தலாகிவிடலாம் என்ற மைத்திரியின் அச்சம்தான் இதற்குக் காரணம். ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் முழு அளவிலான ஆதரவு இருந்தமையால் ஜனாதிபதி மைத்திரியால் இலகுவாக வெற்றிபெற முடிந்தது. பொதுத் தேர்தலில் மகிந்த அணியுடன் இணைந்தே அவரது அணி களம் இறங்கியது. அதனால் 96 ஆசனங்களைப் பெற்று இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியாகியது. ஆனால், இப்போது மகிந்த தனியாகளக் களம் இறங்கியுள்ள நிலையில் தான் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவோம் என்பது மைத்திரிக்குத் தெரிந்தே இருந்தது.
இந்தநிலையில்தான் அவருக்கு ‘பிணை முறி’ விவகாரம் கைகொடுத்தது. தேர்தல் பிரசாரம் உச்ச நிலையை அடைந்த போது பிணைமுறியை கைகளில் எடுத்த மைத்திரி, ஐதேக தலைமையைத் தாக்குதவற்கு அதனைத் தாராளமாகப் பயன்படுத்தினார். “ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தன்னுடை வாளுக்கு அவர்கள் தப்ப முடியாது என அதிரடியாக அறிவித்தார். தன்னுடைய நிலையை ஓரளவுக்காவது அது பாதுகாக்கும் என அவர் கருதியிருக்கலாம். மாறாக, அது ராஜபக்‌ஷவின் வாக்கு வங்கியைத்தான் அதிகரித்திருக்கின்றது. அதேவேளையில், தேகவின் வாக்கு வங்கியிலும் இந்த பிணைமுறி விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால்தான் முதலாவதாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஐதேக இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
தேர்தல் முடிவுகள் தெளிவான ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது. ராஜபக்‌ஷக்களைத் தவிர்ததுவிட்டு அரசியல் செய்ய முடியாது என்பதுதான் அந்தச் செய்தி. அதாவது, இந்த நாட்டில் பேரிவாதத்தின் கைகள் மேலோங்கியிருக்கும் நிலையை இது உறுதிப்படுத்துகின்றது. இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் “இன்னும் தீர்மானிக்கவில்லை” என மைத்திரி இரு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இரண்டாவது தடவையாக போட்டியிட அவர் அப்போது தன்னைத் தயார்படுத்திவந்தார்.
ஆனால், இப்போது அவர் உறுதியான ஒரு முடிவுக்கு வந்திருப்பார். மீண்டும் இதேபோலச் சொல்வது ‘ஜோக்’காகிவிடும் என்பது அவருக்குத் தெரியும். இன்னொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அவர் கனவில் கூட நினைக்கமாட்டார். இப்போதுள்ள நிலையில் அவருக்குள்ள ஒரே தெரிவு மகிந்த தரப்புக்கு வழிவிடுவதுதான். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கின்றது. இதனால்தான், நல்லாட்சி அரசாங்கம் ஆட்டம்காணத் தொடங்கியது. கடந்த வார இறுதியில் மகிந்த அணியும், மைத்திரி அணியும் இணைந்து பொதுவான வியூகம் ஒன்றை அமைத்துச் செயற்பட முற்பட்டிருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் ஜனாதிபதியை பிரதமர் சந்தித்த போது, இருவருக்கும் இடையிலான பேச்சுக்கள் இறுக்கமானதாகத்தான் இருந்தது. பிரதமர் பதவி விலகவேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். கருஜயசூரியவை பிரதமராக்கலாம் என்ற ஆலோசனையையும் மைத்திரி முன்வைத்தார். மைத்திரியின் இந்த ஆலோசனை ஐதேக தரப்புக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் யார் என்பதையே தமது கட்சியின் தலைவர் யார் என்பதையே மைத்திரி தீர்மானிக்க முடியாது என அதன்பின்னர் இடம்பெற்ற கட்சியின் குழுக்கூட்டத்தில் ஐதேக அமைச்சர்களும் எம்.பி.க்களும் கடுமையாகச் சொல்லிவிட்டார்கள். அதற்கு மேலாக பிரதமர் பதவியிலிருந்து ரணில் விலகக்கூடாது என்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
தேர்தலில் படுதோல்வியடைந்த மைத்திரி தரப்பு ராஜபக்‌ஷ தரப்பை சமாளித்துப்போவதற்குத் தயாராகவிட்டது என்பதைத்தான் மைத்திரியின் இந்த நிலைப்பாடு உணர்தியது. பதவி விலகுவதில்லை என்ற ரணிலின் உறுதிப்பாடு அடுத்த நகர்வை நோக்கி மைத்திரி தரப்பை தள்ளியது. தனியான ஐமசுமு அரசாங்கம் அமைக்கப்படும் என அவர்கள் அறிவித்தார்கள். அதன் பிரதமராக நிமால் சிறிபால டி சில்வா இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. நிமல் பிரதமரானாலும் அவரை ஆட்டுவிப்பவராக மகிந்தவே இருப்பார் என்பது அரசியல் தெரிந்தவர்களுக்குப் புரியும். ஆனால், 96 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள அவர்களால், எவ்வாறு தனியாக ஆட்சி அமைக்க முடியும்?
ஐ.தே.க.விலுள்ள சிலரைத் தமது பக்கம் இழுக்க அவர்கள் முயற்சிப்பதாகத் தெரிகின்றது. ஐதேக தலைமையில் அதிருப்தியடைந்திருக்கும் சிலர். சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகள் என சிலரை தமது பக்கம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை அவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். முதற் கட்டமாக ஆறு உறுப்பினர்களை எடுத்தால் ஐதேவுடன் சமநிலைக்கு வந்துவிடலாம். பின்னர் பலரும் தாமாகவே வர விரும்புவார்கள் என்ற உபாயத்துடன் காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால், ஐ.தே.க. தரப்பும் தமது கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி.க்களான 106 பேரிடமும் ஆதரவுக் கையொப்பங்களைப் பெறும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தெரிகின்றது.
நல்லாட்சி அரசு உடைந்திருக்கும் நிலையில் முட்டுக்கட்டை நிலை நிலை ஒன்று அரசாங்கத்தில் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவர 4 தெரிவுகள் மட்டுமே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
(1) ரணில் பிரதமர் – ஐதேக + சிறுபான்மை கட்சிகள் + ஸ்ரீலசுக அதிருப்தியாளர்
(2) நிமல் பிரதமர் – ஸ்ரீலசுக + கூட்டு எதிரணி + சிறுபான்மை கட்சிகள் + ஐதேக அதிருப்தியாளர்
(3) கரு பிரதமர் – ஐதேக + ஸ்ரீலசுக + சிறுபான்மை கட்சிகள்
(4) ரணில் பிரதமர் – சிறு புனரமைப்புகளுடன் இன்று இருப்பது போலவே ஐதேக+ ஸ்ரீலசுக + சிறுபான்மை கட்சிகள்.
இதில் இரண்டாவது தெரிவை நோக்கியே ஜனாதிபதியும் அவரது கட்சியும் செயற்படுகின்றன. ஆனால், அதற்கு சிறுபான்மைக் கட்சிகள், ஐ.தே.க. அதிருப்தியாளர்கள் கணிசமான தொகையினர் தேவை. குறைந்த பட்சம் 17 எம்.பி.க்களாவது கட்சிமாற வேண்டும். ஆனால், சொன்னதைப்போல அது இலகுவானதல்ல. தனியாக அரசாங்கத்தை அமைக்கப்போவதாகவும், நிமல் சிறிபால டி சில்வா அதன் பிரதமராக இருப்பார் எனவும் அவர்கள் அதிரடியாக அறிவித்த போதிலும், அந்த இலக்கை நோக்கி ஒரு அடியைக் கூட அவர்களால் எடுத்துவைக்க முடியவில்லை.
19 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் ஜனாதிபதியால் பிரதமரைப் பதவி நீக்கம் செய்யமுடியாது. அமைச்சர்களை நியமிப்பதானாலும் பிரதமரின் சம்மதத்தை ஜனாதிபதி பெறவேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதாவது, பிரதமரை தன்னால் நீக்க முடியுமா என ஜனாதிபதி விளக்கம் கேட்டதாக செய்திகள் வெளியான போதிலும், அதற்குச் சாதகமான பதில் 3 நாட்களாகக் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தையும் அவர் நாடக்கூடும். மகிந்தவுக்கு பூட்டுப்போடுவதற்காக கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தம் இன்று மைததிரிக்கே பூட்டுப்போட்டுள்ளது. முதலாவது, பிரதமரை பதவிநீக்க முடியாது என்பது. இரண்டாவது நான்கரை வருடத்துக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்பது.
மகிந்தவின் பொது எதிரணி, நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என்றே வலியுறுத்தியது. ஆனாலும் இதற்கு உடனடிச் சாத்தியம் இல்லை என்பதனால் தற்காலிக உபாயமாக நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தது. மைத்திரியும் அந்த இடத்தில் மகிந்தவுடன் உடன்படுகின்றார். ஆனால், அதற்கும் சாத்தியமற்ற ஒரு நிலைதான் உள்ளது. இப்போதுள்ள நிலையில், இந்த முட்டுக்கட்டை நிலை தொடரும். சில சமயம் புதிய பிரதமர் ஒருவரை ஐ.தே.க. சிபார்சு செய்யலாம். பிரதமர் யார் என்பதைத் தெரிவு செய்யும் உரிமையை ஜனாதிபதியிடம் விட்டுக்கொடுக்க ஐ.தே.க. தயாராகவில்லை.
ஆனால், எது எப்படியென்றாலும், பாராளுமன்றத்தின் நான்கரை வருடங்கள் வருகின்றது என்பதற்காகக் காத்திருந்து 2020 முற்பகுதியில் மைத்திரி பாராளுமன்றத்தைக் கலைப்பார். 2020 இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்பார்க்கலாம். இதில் மீண்டும் அதிகாரத்துக்கு வரப்போவது யார் என்பதை நாம் சொல்லித்தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்ற நிலை நிச்சயமாக இருக்காது…!
– தமிழ்லீடருக்காக கிருஷ்ணகுமார்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila