சண்டைக்காரனை நம்பத் தொடங்கும் தமிழர்கள்!

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற பழமொழியைத் தான் இப்போது தமிழர்கள் நாடுகிறார்களோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் வடக்கில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மற்றும் மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சியை மையப்படுத்தி வெளிவரும் கருத்துக்களில் இருந்தே இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.
முதலில் மகிந்த ராஜபக்சவின் மீள் வருகையை சாதகமானதாக தமிழர் தரப்பிலும் சிலர் நோக்கத் தொடங்கியுள்ளதைப் பற்றிப் பார்க்கலாம்.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தெற்கில் தோன்றியுள்ள ராஜபக்ச அலையை அடுத்து சிலர் அவரைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தரப்பின் பிரதிநிதி ஒருவர், தமது உறவுகளைக் கண்டுபிடிப்பதற்கு ஜனாதிபதி எந்த உதவியும் செய்யாத நிலையில் மகிந்த ராஜபக்சவே அதனைச் செய்யக் கூடியவர் என்ற ஒரு சிறிய நம்பிக்கை தமக்குப் பிறந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
அவரது காலத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்து அவரே பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிலளிப்பதற்கான கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக மகிந்த ராஜபக்ச கருதியிருந்தால், அதனை அவர் ஆட்சியில் இருந்த காலத்திலேயே செய்திருப்பார்.
அப்போது அதனைச் செய்யாதவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து அதனைச் செய்வார் என்றும் நம்பும் நிலைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் ஏமாற்றத்தையும் தடுமாற்றத்தையுமே வெளிப்படுத்துகிறது.
இந்த விடயத்தில் மாத்திரமன்றி ஏனைய பல விடயங்களி’லும் தமிழர் தரப்பில் பலரும் இதுபோன்ற தடுமாற்றங்களையே கொண்டிருக்கின்றனர்.
ஓர் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாவின் இன்னொரு தெரிவை நாடுவது தான் வாக்காளர்களின் இயல்பான மனோநிலை. அத்தகையதொரு சாதாரண மனோநிலைக்கு தமிழர் தரப்பில் ஒரு பகுதியினரும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பது உறுதியாகத் தெரிகிறது.
தெற்கில் தோன்றியுள்ள ராஜபக்ச அலை என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வழியே கட்டமைக்கப்பட்டது என்ற உண்மையை உணராமல் தான் அவரைக் கொண்டு தமது பிரச்சினைகைளைத் தீர்க்கலாம் என்று தமிழர் தரப்புக்குள் சிலர் நம்புகின்றனர்.
ராஜபக்ச முடிவெடுப்பதில் உறுதியானவர். ஆனால் தனது நிலைப்பாட்டில் எப்போதும் இறுக்கமானவர். மகிந்த ராஜபகஒருபோதும் தமிழர் தரப்பின் உரிமைகளை விட்டுக்கொடுக்க இணங்கியவரில்லை.
அண்மைய தேர்தலில் கூட தாமே தூய தமிழ்த் தேசியவாதிகள் என்று அடை்யாளப்படுத்திக் கொண்ட தரப்பினரால் ஒற்றையாட்சி அரசியலமைப்பு யோசனை என்று கூறி நிராகரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை இது சமஷ்டியே தனிநாட்டைக் கொடுக்கப் போகிறது என்று பிரசாரப்படுத்தியே சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றவர் மகிந்த.
அப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவரிடம் அத்தகைய வாக்குறுதியைக் கொடுத்த ஒருவரிடம் இருந்து எவ்வாறு தமிழர்கள் தமக்கான உரிமைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுகிறது.
மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ் மக்கள் கேள்வி கேட்பதற்கு தார்மீக உரிமை இருக்கிறது. ஏனென்றால் அவரைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்கள் தமிழர்கள். ஆனால் ராஜபக்சவை நோக்கி அத்தகைய தார்மீக உரிமையோடு கேள்வி எழுப்ப முடியாது.
அவர் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளினால் தான் வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவர்களின் நிலையில் இருந்தே செயற்படுவாரேயன்றி தமிழ் மக்களின் மீது அவர் கரிசனை கொள்வார் என்று நம்ப முடியாது.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான உதய கம்மன்பில தாமரை மொட்டை தமிழ் வண்டுகளும் முஸ்லிம் தேனீக்களும் வட்டமடிக்கும் என்று கூறியிருந்தார்.
சந்திரிகாவின் காலத்தில் தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மையினரான செடிகளின் மீது படர்கின்ற கொடிகள் என்று கூறப்பட்ட கருத்து பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
அதுபோலத்தான் மொட்டைச் சுற்றி வட்டமடிக்கும் தேனீக்களாகவும் வண்டுகளாகவும் தான் சிங்களப் பேரினவாதிகள் தமிழர்களைப் பார்க்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவரைக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று நம்புகின்ற தரப்பாக ஒன்றும், அவர் எதற்கும் இணங்கமாட்டார் என்பதால் தமிழர்கள் எதிர்ப்பு அரசியலை இலகுவாகக் கையாளலாம்.
சர்வதேசத்தை தமது பக்கம் திருப்பலாம் என்று மற்றொரு தரப்பினரும் கணக்குப் போடுகின்றனர். இது தமிழரின் அரசியல் போக்கு கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
2005 பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க விடுதலைப் புலிகள் கோரினர் அதற்குக் காரணம் கடும் போக்காளரான மகிந்த ராஜபக்சவை போரில் இலகுவாகத் தோற்கடித்து விடலாம் என்ற கணிப்புத் தான்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானால் அவருடன் பேசியும் எதையும் செய்ய முடியாது சண்டையையும் பிடிக்க முடியாது என்பது புலிகளுக்குத் தெரியும். அவரது சர்வதேச ஆதரவுத் தளம் தமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் புலிகள் கருதியிருந்தனர்.
அதனால் தமிழர்களே வாக்களிக்காமல் ராஜபக்ச தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாகினர். அப்போது அந்தத் தெரிவு தப்பாகிப் போனது. அது புலிகளுக்கே ஆபத்தானதாகவும் அமைந்தது.
அந்த முடிவுக்குப் பின்னரும் தமிழர் தரப்பில் உள்ள சிலர் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தால் ஏதோ சர்வதேசம் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொடுத்து விடும் என்ற கனவில் மிதக்கிறார்கள் பூகோள அரசியலைக் கையாளும் திறன் மகிந்த ராஜபக்சவுக்கும் இருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
பூகோள அரசியலைத் தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதில் மகிந்த ராஜபக்ச சளைத்தவரில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அடையாளப்படுத்தி அவர் தொடுத்த தமிழர்களுக்கு எதிரான போரே அதற்கு சரியான உதாரணம்.
அதற்குப் பின்னரும் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்புகளையெல்லாம் புறந்தள்ளி சீனாவை இன்று இலங்கையின் தவிர்க்க முடியாத தலையீட்டு சக்தியாக கொண்டு வந்து சேர்த்தவரும் அவர் தான். அதுவே அவருக்கு 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியையும் பாடத்தையும் கற்றுக் கொடுத்தது.
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய மகிந்த ராஜபக்ச இன்னொரு தரம் தவறு செய்வார் என்று நம்ப முடியாது. சர்வதேச அரசியல் போக்குகளை அனுசரிக்கத் தவறியதே தமது ஆட்சி பறிபோகக் காரணம் என்ற பாடத்தைப் படித்த அவர் மீண்டும் அதே தவறை இழைக்க முனையமாட்டார்.
மேற்குலகத்தையும் இந்தியாவையும் தனது கைக்குள் போட்டுக் கொள்வாரேயானால் அவர் எந்தப் பிரச்சனையுமின்றி ஆட்சியைத் தொடர முடியும்.
அப்படியான ஒரு அணுகுமுறையை அவர் தெரிவு செய்தால் சர்வதேசத்திடம் நீதியைப் பெறும் தமிழர்களின் கனவும் பொசுங்கிப் போகும்.
மகிந்த ராஜபக்ச இப்போது உள்ளது போன்ற நெகிழ்வுத் தன்மையைக் கடைப்பிடிக்க மாட்டார். அவர் இறுக்கமான போக்கை கடைப்பிடிப்பார். அது தமிழர்களின் உணர்வுகளைக் கொதிநிலையில் வைத்திருக்கும்.
அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என்று நம்பும் தரப்புகளும் தமிழர் தரப்பில் இருக்கலாம். அது பிரச்சினைகளையும் பிரச்சினைகளைச் சார்ந்த அரசியலையும் நீடிப்புச் செய்யுமே தவிர முடிவுக்குக் கொண்டு வராது. பிரச்சினைகளை நீட்டி அரசியலில் குளிர் காய விரும்புவர்களுக்கே அவரது போக்கு கைகொடுக்கும்.
தெற்கில் மகிந்தவின் எழுச்சியையும் வடக்கில் தேசியக் கட்சிகளின் வளர்ச்சியையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
அரசாங்கத்தில் உள்ள தேசியக் கட்சிகள் தமிழர்களை நோக்கி வெகுவாக நகர்ந்திருக்கின்றன. தற்போதைய தேர்தல் முறையும் அதற்கு கைகொடுத்திருக்கிறது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் உள்ள பிளவுகளால் ஏற்பட்ட அதிருப்தி அவற்றின் மீதான நம்பகத்தன்மை இழப்பு தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் வாக்காளர்கள் தேசியக் கட்சிகளின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகளால் பொருளாதார ஆதாயங்களைப் பெற முடியாது. வேலை வாயப்பு போன்றவற்றை அடைய முடியாது என்பதை உணர்ந்து தேசியக் கட்சிகளின் மீது அத்தகைய வாய்ப்புகளுக்காக தமிழர்கள் திரும்பியுள்ளனர்.
இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களைப் போல பொருளாதார, வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள தமிழ் மக்களும் தலைப்படுகின்றனர்.
கொள்கையை மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் அது சாத்தியமில்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். தமிழர்கள் மத்தியில் சலுகை, பொருளாதார ஆதாயங்கள் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்துள்ளமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இன்னமும் பொருளாதார ரீதியாக முன்னேறாத மக்கள் அதற்கான வாய்ப்புகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதை பகுத்தறிந்து பார்க்கத் தயாராக இல்லை.
அவர்களுக்கு தமது முன்னேற்றத்தை அடைவதாற்கான வழிதான் முதன்மையானதாகத் தெரிகிறது. இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்த நிலை மேலும் மோசமடையும்.
ஏனென்றால் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் உதவிகளில் தங்கியிருப்போர் அங்கிருந்து வரும் உதவிகளில் கணிசமானவற்றை இன்னும் 10 ஆண்டுகளில் இழங்து விடுவர்.
புலம்பெயர்ந்தவர்களுக்கும் இங்குள்ளவர்களுக்குமான உறவுகளில் இப்போதே இடைவெளி அதிகரித்து விட்டது. முன்னரைப் போன்று இப்போது வெளிநாட்டு நிதிப்பாய்ச்சல் இல்லை.
வெளிநாடுகளில் உள்ள உறவுகள் தமக்கான தேவைகள் வசதிகளை பெருக்கிக் கொள்ள முனையும் போது இங்கு அனுப்பும் பணத்தைக் குறைத்து விடுவர். அது வடக்கின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.
அப்போது சலுகை மற்றும் பொருளாதார வாய்ப்புகளைன நோக்கிய அரசியல் இன்னும் கூடுதலாக முனைப்படையும். தேசியக் கட்சிகள் திறந்து விடப் போகும் அத்தகைய வாய்ப்புகளுடன் போராட முடியாத நிலை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏற்படும்.
சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்று தமிழ் மக்கள் சிந்திக்கத் தொடங்கினால் அல்லது தமிழ் மக்களை அவ்வாறு சிந்திக்கத் தூண்டினால் அதன் விளைவை தமிழ்த் தேசியக் கட்சிகள் தான் அறுவடை செய்யும்.
அத்தகையதொரு அகோரப் பசியுடன் தான் சிங்களப் பேரினவாதப் பூதம் காத்திருக்கிறது. அந்த இரையை அடைவதற்காக சிங்களப் பேரினவாதப் பூதம் தன்னை மறுவடிவமைத்துக் கொள்ளவும் ஒருபோதும் தயங்காது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila