
இன்றைக்கு மே 17. ஈழத்து மக்களின் வாழ்வில் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களில் இதுவும் ஒன்று. தமிழ் இனம் சந்தித்த மாபெரும் இழப்பு. மாபெரும் துயரம். மாபெரும் மனித அழிப்பு. சிங்களப் பேரினவாத அரசு தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க நிகழ்த்திய மாபெரும் இன அழிப்புச் செயலே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. எனவே இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருவதற்காக இன்று எம் இனம் போராடுகிறது.
அண்மையில் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுநாள் குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். வடக்கு மக்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரலாம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் விடுதலைப் புலிகளையோ, அவர்களின் தலைவர்களையோ நினைவுகூர முடியாது என்றும் அப்படி நினைவுகூர்ந்தால் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இங்கு இந்த அரசாங்கம் தந்திரமானதொரு செயலைச் செய்கிறது. தமிழ் மக்களும் புலிகளும் வேறு வேறானவர்கள் என்ற சிங்களப் பேரினவாத அணுகுமுறையில் பாரக்கிறது. சிங்கள மக்களும் சிங்கள அரசும் சிங்கள இராணுவமும் ஒன்று, ஆனால் புலிகளும் தமிழ் மக்களும் வேறு வேறானவர்கள். ஏனெனில் விடுதலைப் புலிகள் வானத்தில் இருந்து வடகிழக்கில் குதித்தவர்கள் போலும். விடுதலைப் புலிகள் என்ற ஈழப் புரட்சிப் போராளிகள் வடகிழக்கு தமிழ் சனங்களின் பிள்ளைகள். வடகிழக்குச் தமிழ் சனங்களின் போராளிகள்.
சிங்கள அரசும், சிங்கள மக்களும், சிங்கள இராணுவமும் வடகிழக்கு சனங்கள்மீது இன ஒடுக்குமுறையை இன அழிப்பை, இன உரிமையை மறுத்தபோது வெளிப்பட்ட புரட்சியே விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகள் என்ற உன்னத இயக்கத்தின் தோற்றுவாய்க்கு சிங்கள தேசமே காரணம் என்பதை முற்போக்காளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். புலிகள் ஆயுதம் ஏந்த நாமே காரணம் என்று மைத்திரி கூறுகிறார். பின்னர் ஏன் இவ்வாறு சிங்களப் பேரினவாத ஓரவஞ்சனை?
உண்மையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஏன் நிகழ்த்தப்பட்டது? தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காக, விடுதலைக்காக, அந்த இலட்சியத்திற்காக மெய்யாகப் போராடிய ஒரு இயக்கத்தை அழிப்பதற்காகவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. இந்த இனப்படுகொலை தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இனப்படுகொலை. தமிழ் ஈழச் சனங்களின் விடுதலை எழுச்சியை அடக்குவதற்கான இனப்படுகொலை.
இந்தஇனப்படுகொலை என்பது புலிகளை அழிப்பதற்கான மக்கள் இனப்படுகொலையாக இருந்தது. ஏனெனில் மக்களில் இருந்தே புலிகள் வந்தனர். புலிகளுடனே மக்கள் இருந்தனர். இதனால் புலிகளையும் மக்களையே சேர்த்தே அழிக்க வேண்டிய தேவை சிங்களப் பேரினவாத இன அழிப்பு அரசுக்கு இருந்தது. புலிகளுடன் மக்களையும் அழிப்பதால் புலிகள் இனி ஒருபோதும் உயிர்த்தெழார்கள் என்றும் ஸ்ரீலங்கா அரசு நினைத்தது.
எனவே இவ்வாறு தமிழ் ஈழ மக்களும் புலிகளும் வேறுபாடற்ற ரீதியில் அழிக்கப்பட்ட பின்னர், அழிக்கப்பட்ட புலிகளை நினைவுகூர முடியாது என்று ஸ்ரீலங்கா அரசு சொல்வது என்ன நியாயம்? எதற்காக? ஒரு இனப்படுகொலை அரசிடம் அந்த நியாயத்தைத்தான் எதிர்பாரக்க்லாமா? முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழ் இன அழிப்பு நினைவு நாட்களே. அங்கும் புலிகளும் தளபதிகளும் மக்களும் உள்ளடக்கம். புலிகள் என்ற போராட்ட அடையாளத்திற்கு அப்பால் அவர்கள் தமிழ் ஈழர்கள். அவர்களையும் ஒட்டுமொத்த ஈழத் தமிழனமும் நினைவுகூரும்.
கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச கடுமையான கெடுபிடிகளை செய்து, இராணுவத்தை வைத்து மக்களை மிரட்டி, முள்ளிவாய்க்கால் நினைவுக் காலத்தை போர்க்காலம் ஆக்கியபோதும், எமது மக்கள் இனப்படுகொலையை நினைவுகூர்வதை, சிங்களப் பேரினவாத இன அழிப்பு அரசை எதிர்த்து குரல் எழுப்புவதை நிறுத்தியிருக்கவில்லை. ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் அவ்வாறு நினைவுகூர்ந்த தமிழ் மக்கள் தமது போராளிப் பிள்ளைகளை நினைவுகூர்ந்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், அவர்கள் படுகொலையை கண்டித்துமே குரல் எழுப்பினார்கள். தமிழ் ஈழ மக்களைப் பொறுத்தவரையில் புலிகளும் மக்களும் வேறுவேறல்ல. அதனைச் சொல்லியும் தெரியவேண்டியதில்லை என்பதே உண்மை நிலை.
எவ்வாறெனினும் இந்தப் போரின் போது தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் எவ்வாறு ஒன்றாக அழிக்கப்பட்டார்கள் என்றும் எதற்காக கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் இந்த உலகத்திற்கு எடுத்தும் உரத்தும் சொல்வது அவசியமானது. அதில் தான் தமிழ் மக்களுக்கான நீதியும் நியாயமும் தங்கியுள்ளது. அதுவே தமிழ் ஈழ மக்களின் நிரந்தர விடுதலைக்கும் உரிமைக்கும் அமைதிக்கும் அவசியமானது.