தமிழ்ப் புத்திஜீவிகள் இனியும் பொறுக்கக் கூடாது


மக்கள் எப்படியோ அப்படித்தான் அரசியல்வாதிகளும் இருப்பர் என்றவொரு அறிஞனின் கருத்தை தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய அனைத்து பிரஜைகளும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

மக்கள் ஏனோதானோ என்றிருந்தால் அரசியல்வாதிகளும் அதைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்வர். இதற்கான சாட்சியத்துக்காக நாம் எங்கும் செல்லத் தேவையில்லை. எங்களிடமே அதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு.

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்களை யாருமே கெடுக்கத் தேவையில்லை. நாமே நமக்கு பகை என்றான ஒரு சூழ்நிலைமையில் இருக்கின்றோம். இந்நிலைமையானது மிகப்பெரும் ஆபத்தானது. நாமே நமக்கு பகையாகிப் போனால் அழிவைத் தவிர வேறு எதுவும் நடக்க மாட்டாது. உலகில் யாருடனும் மோதி வெற்றி பெற்றுவிடலாம். ஆனால் உள்வீட்டுக்குள் குழப்பம் என்றால் அது மிகப்பெரும் பயங்கரமாகும். உள்வீட்டுக் குழப்பம் வெற்றியாயினும் தோல்வியாகவே இருக்கும்.

பாரதப் போர் சகோதரர்களுக்குள் நடந்த யுத்தம். இராமாயணம் உள்வீட்டுச் சூழ்ச்சியில் இன்னொருவன் அநீதி இழைத்த கொடுமையின் காப்பியம். ஆக, பாரதம், இராமாயணம் என்ற இரு பெரும் இதிகாசங்களையும் எடுத்து நோக்கினால் பாரதம் சகோதரர்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதைக் காட்டுவது.

இராமாயணம் தம்பியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்தியம்புவது. ஆக, ஒற்றுமையில்லாத தம்பியர்கள் தமக்குள் போர் செய்து கொள்கின்றனர். வெற்றி பாண்டவர்களுக்காயினும் தம் பெரிய தந்தையின் பிள்ளைகளை போரில் கொன்றொழித்தோமே என்ற துன்பம் பாண்டவர்களிடம் இறுதி வரை இருந்தது.

அதேநேரம் இராமாயணத்தில் கைகேயி சூழ்ச்சி செய்தாளாயினும் அந்த சூழ்ச்சியை இராம சகோதரன் பரதன் இம்மியும் ஏற்றிலன். அதனால் எதிரியை வென்று மீண்டும் ஆட்சி புரியும் வாய்ப்புக் கிடைத்தது. எனவே எங்கிருந்து பகை வந்தாலும் உள் வீட்டுக்குள் இருந்து பகை வருமாயின் அது அந்த வீட்டை, இனத்தை பரிநாசப்படுத்தி விடும்.

ஆகையால் வீட்டுக்குள் குழப்பம் வரலாகாது என்பதை பாரதப்போரில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் குழப்பம் விளைவித்து எங்கள் மண்ணில் எதுவும் நடக்காமல் செய்கின்ற அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்ப் புத்திஜீவிகள் இனிமேலாவது கவனம் செலுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடுவது, ஆலோசனை வழங்குவது, அவர்களை சரியாக வழிப்படுத்துவது என்ற வாறான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதெல்லாம் நமக்கேன் என்றிருந்தால் எங்கள் எதிர்காலம் படுபாதாளத்துக்குள் செல்வது தடுக்க முடியாமல் போகும்.

- வலம்புரி
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila