
போர்க்குற்ற விசாரணையைத் தட்டிக் கழிக்கவே அரசாங்கம் பார்க்கின்றது. சிங்கள மக்கள் பார்க்கின்றனர். ஏன் எம்முட் சிலரும் எண்ணுகின்றனர். பிழைகள் செய்தவரைத் தண்டிக்காது தப்பவைக்கவே அரசாங்கம் தன்னைத் தயார்படுத்தி வருகின்றது.
இதற்கு மாறாக யாவரும் நீதிக்காகப் போராட முன்வரவேண்டும். நியாயமான சிங்களத் தலைமைகளும் இதில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சர்வதேசம் இதில் மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இறந்த எம்மக்களின் ஆத்மா சாந்தி அடைய போர்க்குற்ற விசாரணை நடந்தே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முள்ளி வாய்க்காலில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் இறந்த மக்களுடைய நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆண், பெண், குழந்தை, வயோதிபர், வலுவிழந்தோர் என்ற பாகுபாடின்றி அவர்களின் உயிர்களைப் பறித்தெடுத்த 2009ம் ஆண்டின் மே மாத இறுதி யுத்த சோக நிகழ்வுகளையே இன்று நினைவுகூருகின்றோம். எமது மதிப்பிற்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் சாட்சியத்துடன் நூற்றிநாற்பதாயிரத்திற்கு மேல் எம்மக்கள் அத்தருணத்தில் கொல்லப்பட்டதாகக் கூறினும் இதுவரை யார் யார் கொல்லப்பட்டார்கள்.
அவர்கள் விபரங்கள் என்ன, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற எந்த விபரங்களையும் முறையாக அறிந்து கொள்ள உத்தியோக ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சாட்சிகளில்லா யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன.
பாதிப்புற்ற மக்களின் மனச் சுமைகளை நீக்க இதுவரை என்ன செய்துள்ளோம்? அவர்களின் பாதிப்புக்களை இனங்காண என்ன செய்திருக்கின்றோம்? தன்னம்பிக்கை இழந்து நடைப் பிணங்களாக வலம் வரும் எம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மால் இதுவரை செய்ததாகச் சொல்லும் அளவுக்கு எதுவுமிருக்கின்றதா என்றால் எம்மால் திடமாக ஐயமற்ற பதிலைக் கூறமுடியாமல் இருக்கின்றது.
மக்களின் கூட்டு ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமாகவே நாங்கள் இன்று இங்கு கூடியுள்ளோம். ஒருங்கு சேர்ந்து சோகத்தை வெளிப்படுத்துவது என்பது எமது பாரம்பரியப் பழக்கமாகும். அது சமூக கலாச்சாரப் பின்னணி கொண்டது. ஆனால் எமது சோகத்தைக் கூட்டாக வெளிக்காட்டுவதைக் கூட அண்மைக்காலம் வரையில் தடை செய்திருந்தார்கள்.
அழுவதென்பது மனதின் சுமையைக் குறைக்கும் ஒரு கைங்கரியம். அதற்குத் தடை செய்தவர்கள் மனித பண்பை இழந்தவர்கள். இன்று பலத்த கெடுபிடிகள் அடங்கி விட்டன. நாமும் சேர்ந்து தேர்ந்தெடுத்த அரசாங்கம் இதிலாவது எமது மனோநிலையைப் புரிந்து நடப்பது எமக்கு மனதுக்கு இதமாக இருக்கின்றது. எனினும் போர்க்குற்ற விசாரணை சம்பந்தமாக மந்த கதியே அவதானிக்கப்படுகின்றது.
2015ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 23ந் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய இளவரசர் செய்யித் இராட் அல் ஹ{சேயின் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். அதில் பொறுப்புக்கூறல், உண்மை, நீதி, நல்லிணக்கம் என்பவற்றை நிலைநாட்ட வலிமையான நடவடிக்கைகளைச் சர்வதேச சமூகம் எடுக்கும் என்று போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் எதிர் பார்ப்பதாகக் கூறினேன்.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் ஒரு ஒற்றுமைப் பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைப் பற்றி 30.09.2015ல் நான் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்யித் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரேரணையை வரவேற்று அதே நேரம் எமது பல கரிசனைகளையும் வெளியிட்டிருந்தேன். முக்கியமாக போர்க் குற்றங்கள் எமது சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட குற்றங்கள் அல்லாததால் எவ்வாறு அவற்றை எமது நாட்டுச் சட்டத்துடன் உள்ளடக்கப் போகின்றீர்கள் என்றும், உள்நாட்டு வழக்கு நடத்துநர்கள் ஒரு போதும் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு நீதி பெறச் செய்யும் வண்ணம் நடந்து கொள்ள மாட்டார்கள் எனவும் சர்வதேச வழக்கு நடத்துநர் ஒருவரை நியமிக்குமாறும் மேலும் உள்நாட்டு நீதிபதிகளை நியமித்தால் நீதி கிடைக்காது என்றும் சர்வதேச நீதிபதிகளுக்கு மேற்படி நீதிபதிகள் குழாமில் பொறுத்த தீர்மானம் எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி எழுதியிருந்தேன்.
பிரேரணையை வரவேற்று அதே நேரத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதில் சர்வதேச சமூகம் மிக்க அவதானத்துடன் பாதிக்கப்பட்ட எம்மக்களின் நலன்கருதி கண்காணிப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றுங் கேட்டுக் கொண்டிருந்தேன். அத்துடன் அவரை வடமாகாணத்திற்கு வரும்படி அழைத்ததன் பயனாக அவர் வந்து எம்மைச் சந்தித்துஞ் சென்றார்.
தற்போது அப்பிரேரணை கொண்டு வந்து 8 மாதங்கள் ஆகின்றன. போர்க்குற்ற விசாரணையை நடத்த எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை.
இது இப்படி இருக்க ஊடகவியலாளர் குஷால் பெரேரா அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு நான் சென்ற வாரம் கொழும்பு சென்றிருந்த போது என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 90 சதவீதம் சிங்கள சகோதரர்களைக் கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர்கள் அனைவரதும் கேள்வியாகவே அது அமைந்திருந்தது. தேசிய நல்லிணக்கத்தின் பொருட்டு போர்க்குற்ற விசாரணையைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற பலரின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டார்கள். இதனை எம் தமிழ் மக்களும் கேட்டிருப்பதாக அறிவித்தார்கள்.
அதற்குப் பதில் அளிக்கும் போது நான் கூறினேன் “போர்க்குற்ற விசாரணை வேறு நல்லிணக்கம் வேறு. நடந்ததற்காகவே போர்க்குற்ற விசாரணை நடைபெறுகின்றது. இனி நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியதே நல்லிணக்க ஆராய்வு. இவற்றை வைத்துப் பண்டமாற்றுச் செய்வது போரில் உற்றார் உறவினர்களை இழந்த மக்களுக்குத் துரோகம் செய்வதாக அமையும்.
வேண்டுமென்றே செய்யப்பட்ட வெறித்தனமான செயல்களுக்குப் பச்சைக் கொடி காட்டினால் மீண்டும் அத்தகைய நடவடிக்கைகள் நடந்தேறுவன. எமது அரசாங்கம் எம்மைக் காப்பாற்றும்; நாம் நினைத்தவாறு எதனையுஞ் செய்யலாம் என்ற மனோநிலை இராணுவத்தாரிடம் வந்துவிடும். இதனால் நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படாது. நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறினேன்.
ஆகவே எப்படியாவது போர்க்குற்ற விசாரணையைத் தட்டிக் கழிக்கவே அரசாங்கம் பார்க்கின்றது. சிங்கள மக்கள் பார்க்கின்றனர். ஏன் எம்முட் சிலரும் எண்ணுகின்றனர். பிழைகள் செய்தவரைத் தண்டிக்காது தப்பவைக்கவே அரசாங்கம் தன்னைத் தயார்படுத்தி வருகின்றது. இதற்கு மாறாக யாவரும் நீதிக்காகப் போராட முன்வரவேண்டும். நியாயமான சிங்களத் தலைமைகளும் இதில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சர்வதேசம் இதில் மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக சில பல நாடுகள் கூட போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் நாங்கள் சமஷ்டி எடுத்துத் தருகின்றோம் என்று கூற முன்வந்துள்ளார்கள்.
போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த குற்றங்களின் பாரதூரமான தன்மையை மனதிற்கு எடுக்காமல் இவர்கள் கதைக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பாதிப்பையும் பரிதவிப்பையும் இவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள் என்றால் இவ்வாறான பண்டமாற்று பற்றிப் பேச முன்வந்திருக்க மாட்டார்கள். இறந்த எம்மக்களின் ஆத்மா சாந்தி அடைய போர்க்குற்ற விசாரணை நடந்தே ஆகவேண்டும்.
கலிங்கத்துப் போரின் பின்னர் போரில் இறந்தவர்களையும், காயமடைந்தவர்களையும், கைம்பெண்களையும், கைவிடப்பட்ட குழந்தைகளையுங் கண்டு மனம் வெதும்பினான் அசோகச் சக்கரவர்த்தி. அதனால்த்தான் புத்தரின் போதனைகளை நாடிச் சரணடைந்தான். எமது நாட்டின் தலைவர்கள் புத்த பெருமானின் பெயரால் நீதியை நிலைநாட்ட பாதிக்கப்பட்ட மக்களின் குறைதீர்க்க, இறந்த அப்பாவிகளின் ஆத்மா சாந்தியடைய போர்க்குற்ற விசாரணையைத் தாமதமின்றி சர்வதேச உதவியுடன் கூடி நடத்த முன்வர வேண்டும்.
எம்மைக் காண வாரந்தோறும் குடும்பத்தவரைப் பறிகொடுத்தவர்கள், காணாமல் போனவர்களின் உற்றார், உறவினர், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், கைகால்களை இழந்தவர்கள், கண்களை இழந்தவர்கள், அன்புப் பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள், பெண் தலைமைத்துவ குடும்பத் தலைவிகள் எனப் பலர் வருகின்றார்கள்.
அவர்கள் யாவரும் நீதியைக் கேட்டு நிற்கின்றார்கள்.
இன்றும் இங்கு நாம் யாவரும் 2009ம் ஆண்டு மே மாதம் 18ந் திகதி இங்கு நடந்த போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்டு நிற்கின்றோம். நீதியை வழங்க எமது நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேச அரசாங்கங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் முன்வரவேண்டும்.
இந்தத் தினத்தில் 2009ம் ஆண்டு இங்கு அநியாயமாக மரணத்தை அணைத்துக் கொண்ட அத்தனை பேர்களினதும் ஆத்மாக்கள் சாந்தி அடைய நாம் யாவரும் பிரார்த்திப்போமாக! அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எமது உளமார்ந்த வருத்தங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் இழப்பு அளவிடற்கரியது. உங்களின் மனச்சுமைகளைத் தாங்கும் சக்தியை உங்களுக்கு இறைவன் தருவானாக! சோகத்துடன் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.