பிரபாகரனின் ஆவி அலைகின்றதாம்! : மஹிந்த அணி கூறுகிறது
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாலும், அவரது ஆவி இன்னும் நாட்டில் அலைகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்- ”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிராமத்திற்கு கிராமம் சென்று மக்களுடன் நடத்தும் சந்திப்பை நிறுத்துவதற்காகவே அவரது பாதுகாப்பை குறைத்துள்ளனர். வடக்கில் தற்கொலை அங்கிகள் கிடைக்கின்றன. இராணுவத்தை அங்கிருந்து அகற்றுகின்றனர். முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுகின்றனர். வடக்கில் கடந்த காலத்தில் இவ்வாறு சுமார் 300 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புச் செயலாளரே கூறியுள்ளார். நாட்டில் இவ்வாறு அச்சுறுத்தலான சூழல் காணப்படுகின்ற நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளில் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமஷ்டியை கேட்கின்றார். மறுபுறம் தமிழகத்தில் ஜெயலலிதா தனி ஈழத்தையே கேட்கின்றார். இவற்றின் மூலம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆவி இன்னும் இந்த நாட்டில் உள்ளதென்பது தெளிவாகின்றது. அவற்றிற்கு எதிராக கதைக்கக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டும்தான். ஆகவே அவரை இல்லாமல் செய்யவே விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர். அதற்கான பாதையை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை கண்டிக்கத்தக்கது. அத்தோடு, முழு நாட்டையும் ‘வைபை’ வலயமாக மாற்றுவதாக தெரிவித்த அரசாங்கம், ‘வற்’ வரியை அதிகரித்ததன் ஊடாக, சிறந்த வைபை ஒன்றை வழங்கியுள்ளது. தேர்தல் காலத்தில் கூறப்பட்ட அனைத்தையும் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாதென்கிறார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க. இதனால், அந்த வாக்குறுதிகளை நம்பிய மக்கள் தொடர்பில் நாம் வருத்தமடைகிறோம். இந்த வரியின் மூலம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இந்த வரியின் மூலம் சாதாரண மக்களின் வயிற்றில் இந்த அரசாங்கம் அடித்துள்ளது” என்றார்.
Related Post:
Add Comments