110 மில்லியன் ரூபாய் பெறுமதியான தமது பேன் ஏசியா வங்கி பங்குகளை ஏமாற்றி கைமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியமளிக்க, அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரைன் ஷாட்டிக் இலங்கை வரவுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில், தற்போது உதய கம்மன்பில விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஷாட்டிக்கின் அவுஸ்திரேலிய லங்கா ஹோல்டிங் நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன்னர் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரியாக இருந்த உதய கம்மன்பில, போலியான பவர் ஒப் எட்டோனியை தயாரித்து கைமாற்றிக்கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் கம்மன்பில கைது செய்யப்பட்டவுடன் இன்று ஸ்கைப் மூலம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற பிரைய்ன் ஷாட்டிக், தாம் ஏமாற்றப்பட்டமை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்தபோதும் அரசியல் செல்வாக்கு காரணமாக கம்மன்பிலவை அனுக முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
அத்துடன், தமது நிறுவனத்தில் முகாமைத்துவ பணிப்பாளராக இணைந்த சிட்டி ஜயசிங்க என்பவர் தம்மை பயமுறுத்தியதாக ஷாட்டிக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சிட்னி ஜயசிங்கவும், கம்மன்பிலவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மரண அச்சுறுத்தல் காரணமாகவே தாம் இலங்கையில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்ட ஷாட்டிக், ஜயசிங்க மீதும் கம்மன்பில மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.