தோல்வியில் முடிவடைந்த சாட்சிப்பதிவு - விரக்தியில் மக்கள் (3ஆம் இணைப்பு)


காணாமல் போனோர் விவகாரத்தில் இதுவரை தமக்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில், முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சாட்சி விசாரணைகளை புறக்கணித்த மக்கள், மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், அலுவலகத்தினரின் கோரிக்கையின் பிரகாரம் சுமார் 25 பேர் வரை சென்று, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சாட்சிப்பதிவை புறக்கணித்து முல்லைத்தீவில் போராட்டம் (2ஆம் இணைப்பு)
காணாமல் போனோர் அலுவலகத்தின் சாட்சி விசாரணைகளைப்  புறக்கணித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காணாமல் போனோர் அலுவலகத்தின்  மீது தமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லையென தெரிவித்துள்ள அவர்களுடைய உறவினர்கள், இது ஒரு கண்துடைப்பு செயலென கூறி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
‘என் மகன் எங்கே – நீயே பதில் கூறு’, ‘எங்கள் பிரச்சினையை ஐ.நா. பொதுச் சபைக்கு மாற்ற வேண்டும்’,  ‘பிரதமரே உமது உறவினர்கள் எங்கே?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, காணாமல் போனோரின்உ றவினர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகள் இன்று முல்லைத்தீவில்!
காணாமல் போனோர் அலுவலகத்தின் பிராந்திய அமர்வு, முல்லைத்தீவில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்த அமர்வு ஆரம்பமாகியுள்ளது. முதலாவது நடவடிக்கையாக கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த காணாமல் போனோரின் குடும்பத்தாரிடம் சாட்சிப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.
11 மணி வரை இந்த சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளதோடு, 11.30 இலிலிருந்து 1.30 வரை ஒட்டுச்சுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய், வெலி ஓயா பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சி விசாரணை இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து 1.30இலிருந்து 2 மணிவரை ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதோடு, காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்வார்களென அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பாக செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களையும் காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
காணாமல் போனோர் அலுவலகம் தாபிக்கப்பட்ட பின்னர், கடந்த மே மாதம் மன்னார் மற்றும் மாத்தறையில் தமது அமர்வுகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila