ஒவ்வொரு நாளும் அகால மரணச் செய்திகள் எங்கள் இதயங்களைக் கருக்கி விடுகின்றன.
விபத்தில், புகையிரதப் பாதையில், தற்கொலையில் என அகால மரணங்கள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவில் நிலைமை உள்ளது. கொடும்பாவிகள் போதைப்பொருளை எங்கள் மண்ணில் பரப்பி விட, ஏதும் அறியாத எங்கள் பிள்ளைகள் சிலர் போதைப் பாவனைக்கு ஆளாகி அல்லல்படுகின்றனர்.
திருந்தினாலும் வாழ முடியாதோ! என்ற ஏக்கம் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் குடி புகுந்துவிட, பெற்ற தாய், தந்தை, சகோதரங்கள் என்ற உறவுகள் அறுந்து போக, யாரும் அற்றவர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் அவலத்தில் ஒருபகுதி இளைஞர்களின் காலம் கடக்கிறது.
இதற்கு அப்பால் குடும்பப் பாசம், சமூகக் கண்காணிப்பு, உறவுகளின் அன்பு என அனைத்தையும் அறுத்து, அறுந்து ஒரு பகுதி இளைஞர்கள் சமூகச்சீரழிவில் இறங்கி உள்ளனர்.
இத்தகைய சமூகச் சீரழிவுக்கு எங்களின் இறுக்கமற்ற- தைரியமற்ற சமூகக் கட்டமைப்பும் காரணமோ என்று நினைக்கும் அளவில் அருமந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
சமூகச் சீரழிவுகளில் ஈடுபடுகின்றவர்களின் குடும்பங்கள் அடைந்துள்ள துன்பம் சாதாரணமானது அன்று.
எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் பிள்ளைகளைப் பெற்று வளர்த்துவிட, அந்தப் பிள்ளைகள் பெற்ற பாசம் மறந்து; சகோதரப் பாசம் துறந்து வாள், கத்திகளோடு வீதிகளிலும் ஆளரவமற்ற இடங்களிலும் பதுங்கி வாழ்கின்ற வாழ்வு கண்டு எந்தப் பெற்றோரால் நிம்மதியாக உண்டு உறங்க முடியும்.
போதாக்குறைக்கு பொலிஸாரின் விசாரணைகள் எந்த வழியிலும் நிம்மதி இல்லை என்ற போது, இந்தப் பிள்ளை வேண்டாம் என்று கை கழுவி விடுகின்ற ஒரு பெரும் துன்பகரமான முடிவை பெற்றோர்கள் எடுத்து விட நிலைமை மோசமாகி விடுகிறது. இங்குதான் வழிப்படுத்தல்கள், ஆற்றுப்படுத்தல்கள் தேவையாகின்றன.
சிக்கல்களுக்குள் அகப்படுகின்ற மாணவர்களை, இளைஞர்களை ஆற்றுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் கட்டாயமானவை. இந்த ஆற்றுகையை ஒவ்வொரு சமயங்களும் சமயத் தலைவர்களும் மேற்கொண்டால் மிகவும் நல்லதாக இருக்கும்.
இவர் மீது எனக்கு நம்பிக்கை; என் பிரச்சினையை இவரிடம் கூறினால் நிச்சயம் அவர் எனக்கு உதவுவார்; என்னைக்காப்பாற்றுவார்; என்னைத் திருத்துவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் போது, பாதை தவறிய எங்கள் பிள்ளைகள் மீண்டும் நன்னிலைப்பட வாய்ப்பு உண்டு என்பதால்,
ஆலயங்கள், தேவாலயங்கள், மத பீடங்கள் வழிப்படுத்தலை செய்யத் தயாராக வேண்டும். இது காலத்தின் தேவை என்பதுடன் இத்தகைய பாதை மாறிய இளைஞர்கள் தொடர்பில் பொலிஸார், சட்டத்துறை என்பன அவர்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பங்களையும் குற்றங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புப் பெறுவதற்கான வழி வகைகளையும் முன்வைப்பது; திருந்த வேண்டும் என்ற மனநிலையில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குவதாக அமையும் என்பதால் அது குறித்த நடவடிக்கைகளும் தேவையாகின்றன.