ஏறாவூர் கடைத்தொகுதி ஒன்றில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட ஒருவகை போதைமாத்திரையை கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு உணவு மற்றும் மருந்துப் பொருள் விற்பனைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மருந்துக்கடையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஏறாவூர் காவல்துறை அதிகாரி சிந்தக பீரிஸ் தலைமையிலான குழுவினரும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பரிசோதகர் ரீ. வரதராஜன் தலைமையிலான குழுவினரும் திடீர் பரிசோதனையை மேற்கொண்டபோதே இந்தப் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு, 18 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும், ஒவ்வொன்றும் தலா 180 மில்லிக்கிராமைக் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இளம் பராயத்தினருக்கு போதையை ஊட்டும் நடவடிக்கையாகவே இந்த மாத்திரைகள் விற்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போதை மாத்திரையானது காலப்போக்கில் நரம்புமண்டலத்தைத் தாக்குவதோடு, பாவனையாளர்களை நிரந்தரமாக ஊனமுறச் செய்யும் தன்மை கொண்டவை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் மீது சடநடவடிக்கை எடுத்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.