யாழ்ப்பாணத்தில் மிகப்பெரியதொரு பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன. அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தைப் பார்க்கும் போது பெரும் பிரமிப்பு.
இருந்தும் எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடம். நாளாந்தம் கொலை, கொள்ளை, களவு, வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே வருகின்றபோது பொலிஸ் நிலையத்தை அமைத்து என்ன செய்வது?
பொலிஸார் தேவைதானா என்று கேள்வி எழுப்பும் அளவில் நிலைமை உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, வாள்வெட்டு கலாசாரம் ஒன்று இப்போது தாண்டவமாட தலைப்பட்டுள்ளது. இதை தடுக்காத பட்சத்தில் நிலைமை மோசமாகும் என்று சொல்வது எவருக்கும் தெரிந்த உண்மை.
களவு நடைபெறுகின்றபோது அந்தப் பக்கமாக யார் சென்றாலும் அவர்கள் மீது வாள்வெட்டு நடத்தப்படுவதான தகவல்கள் அதிர்ச்சிக்குரியவை.
இதனால் இரவு பயணத்தின் போது கடவுளே களவு நடக்கின்ற பக்கத்தால் யாம் செல்லாதிருக்க காத்தருள் என்று பிரார்த்தனை செய்யவேண்டியுள்ளது.
இது தவிர வீடுகளில் இருப்பவர்களும் அன்புக்குரிய கொள்ளையர்களே! எங்கள் வீட்டு பெரிய அறை திறப்பு இந்த இடத்தில் இருக்கிறது. உங்களின் வருகைக்கும் இரவு நேர முயற்சிக்கும் பலன்தரும் வகையில் ஒரு தொகை பணமும் ஒரு சில தங்க ஆபரணங்களும் வைத்துள்ளோம். எடுத்துச் செல்க.
போதக்குறையிருந்தால் ஒரு மடல் எழுதி அனுப்புக. திருப்தி என்றால் குறைந்தது ஒரு வருடத்திற்கேனும் எங்கள் வீட்டுப்பக்கம் வரு வதை தவிர்த்தருள்க என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு ஒரு அறைக்குள் முடங்குவதை தவிர வேறு எதுவும் தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
வீட்டுக்குள் நுழைகின்ற கொள்ளையர்களை சடுதியாக சந்திக்க நேர்ந்தால், அந்தோ கதிதான்.
இருப்பதையும் இழந்து கழுத்தில் வாள் வெட்டும் வாங்கும் பலன் ஆகிவிடும்.
ஆகையால் எங்கள் உழைப்பில் பாதி இரவு நேரக் கொள்ளையர்களுக்கு என்று பிரித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கின்ற அளவிலேயே நிலைமை உள்ளது.
தகவல் தொடர்பாடல்கள், சம்பவங்களை அவதானிக்கும் கமராக்கள், மோப்பநாய்களின் பிரயோகிப்புக்கள் இருக்கின்ற போதிலும் பொலிஸாரால் கொள்ளை, களவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஏன் எதற்காக என்ற கேள்விகள் எழுவது நியாயமானதே.
ஓ! யாழ்ப்பாணம் - வடபுலம் தமிழர் பிரதேசம்; இங்கு நடக்கின்ற எந்த சட்டவிரோத சம்பவங்கள் குறித்தும் நாம் அதிரடியாக நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று பொலிஸார் நினைத்தால், யாம் தமிழர்கள் என்று சொல் வதை தவிர வேறு எதுவும் இல்லை.