மகிந்த அரசின் தவறுகளே வீழ்ச்சிக்குக் காரணம் – கோத்தா


தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மீரிஹானவில் வெள்ளை வான் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், நானும் மீரிஹானவில் தான் வசிக்கிறோம்.

நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். வெள்ளை வான் கலாசாரத்தை ஊக்குவித்ததாக எம்மைக் குற்றம்சாட்டிய சோபித தேர்ர் எங்கே? இது தான் ஜனநாயகமா? நல்லிணக்கத்துக்கு தடையாக இருப்பதாக அவர்கள் எம்மைக் குற்றம்சாட்டினர். ஆனால் எல்லாமே தேசிய பாதுகாப்பை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கூட ஐந்து விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய போது போர் வெறியர்களாக குற்றம்சாட்டப்பட்டோம். ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் நாட்டின் பாதுகாப்பு எந்தளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை தெளிவாக காண முடிகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிலர் சர்வாதிகாரி என்ற குற்றம்சாட்டினர். அவர் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், இப்போதும் அவர் அதிபராக இருந்திருப்பார், நான் பாதுகாப்புச் செயலராக இருந்திருப்பேன். அவருடன் இருந்த சிலர் தவறுகளைச் செய்துள்ளனர். அதுவே அவரது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

தவறு செய்தவர்களை மகிந்த ராஜபக்ச கண்டறிந்திருக்கிறார். கடந்த கால அனுபவங்களின் படி நாம் தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய உதய கம்மன்பில, கடந்த ஜனவரி 9ம் நாள் அதிபர் பதவியை விட்டுச் சென்றவராக மகிந்த ராஜபக்ச வரவில்லை. தனது தவறுகளைத் திருத்திக் கொண்ட புதிய தலைவராக வரும் ஓகஸ்ட் 19ஆம் நாள் வரப் போகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila