தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த புதிய அரசியலமைப்புக்கு யோசனைகளை முன்வைப்பதற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கமானது சாதகத் தன்மைகளை கொண்டிருந்தாலும் பல்வேறு பாதகமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையானது நியாயமான அரசியல் தீர்வை எதிர்பார்த்து நிற்கும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதாவது சிறுபான்மை மக்களின் சார்பில் உப ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தல் மற்றும் மாகாண சபைகளின் பிரதிநிதிகள் அடங்கிய வகையில் செனட் சபையை உருவாக்குதல் போன்ற யோசனைகள் வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கின்றன. பிரதமர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட இந்த மக்கள் கருத்தறியும் குழுவில் 20 பேர் உறுப்பினர்களாக உள்ளதுடன் நான்கு தமிழ்ப் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் நாட்டில் பல மாதங்களாக மக்களிடையே கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்று வந்த இந்த மக்கள் கருத்தறியும் குழுவானது 340 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் அதில் 47 தொடக்கம் 79ம் பக்கம் வரை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. விசேடமாக 75 பேரைக் கொண்ட மேல் சபை (செனட் சபை) உருவாக்கப்பட வேண்டும். இதில் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபைகளிலிருந்து தெரிவு செய்யப்படும் ஆறு பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும். இந்த மேல் சபையில் தேசிய சிறுபான்மையினரின் மொத்த பிரதிநிதித்துவம் பெரும்பான்மை மக்கள் சமூகப் பிரதிநிதித்துவத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது. இதில் மூன்றிலொரு தரப்பினர் பெண்களாக இருக்கவேண்டும். அத்துடன் சிறுபான்மை சமூகத்திலிருந்து உப ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் 9 மாகாணங்களின் முறைமை தொடரவேண்டும். எந்தவொரு மாகாணமும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கப்படக்கூடாது. ஆகவே அரசியலமைப்பில் 154A (3)ம் பிரிவு அகற்றப்படவேண்டும். மாகாண மட்டத்தில் அதிகார பேரளிப்புக்கான அரசியலமைப்பு ஏற்பாடுகளுடன் ஒன்பது மாகாணங்கள் தொடரவேண்டும். ஒற்றையாட்சி முறைமையில் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருத்தல் வேண்டும். மத்திய அரசாங்கம் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கையளிக்கலாம். ஆனால் மாகாணங்களின் சம்பந்தமில்லாமல் அதிகாரங்களை மீளப்பெறுவதற்கான உரிமை மத்திய அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும். மேலும் மொழி, இனம், மதம் அல்லது இனத்துவ அடிப்படையில் எந்த அதிகார அளவும் உருவாக்கப்படக்கூடாது என்றும் மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் பொலிஸ் அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அதாவது முழுநாட்டுக்கும் ஒரு பொலிஸ்படையே இருக்கவேண்டும். எவ்வாறாயினும் குறைந்த மட்ட அதிகாரங்களுடன் மாகாண பொலிஸ் படை அமைக்கப்படலாம். அந்த பொலிஸ் படையானது மாகாணத்தினுள் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் முதலமைச்சருக்கும் அமைச்சர்கள் சபைக்கும் பொறுப்புள்ளதாக இருக்கவேண்டும். தடுப்பு, விசாரணை மற்றும் வழக்குத் தொடரல் விடயங்களில் மாகாண பொலிஸ் படை மாகாணத்தின் அரசியல் செயற்பாட்டாளர்களிலிருந்து விலகி சுயாதீனமாக கருமமாற்றுதல் அவசியம். அத்துடன் அனைத்து மாகாண சபைகளுக்கும் வழக்குத் தொடுநர் நாயகம் நியமிக்கப்படவேண்டும் என்பதுடன் அவர்கள் மாகாணத்தினுள் வழக்குத் தொடர்தல், தடுப்பு விசாரணை போன்றவற்றுக்கு பொறுப்பாக இருப்பார். மேலும் மாகாண பொலிஸ் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படவேண்டும். அதில் ஆளுநரால் நியமிக்கப்படும் முதலமைச்சரின் பிரதிநிதியொருவர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படல் வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க காணிகள் விடயத்தில் தேசிய காணி ஆணைக்குழு உருவாக்கப்படவேண்டும். தேசிய காணி ஆணைக்குழுவானது முதலமைச்சர்கள், காணி, நீர்ப்பாசனம், மகாவலி, மற்றும் நகர்புற அபிவிருத்தி போன்றவற்றிற்கு பொறுப்பான அமைச்சர்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம், மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அரசியலமைப்பு பேரவையின் விதந்துரைப்பின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் நான்கு அங்கத்தவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டிருக்கவேண்டும் எனவும் மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு பார்க்கும் போது மாகாண பொலிஸ் அதிகாரங்கள் செனட் சபை, சிறுபான்மை தரப்பிலிருந்து உப ஜனாதிபதி தெரிவு செய்யப்படுதல் உள்ளிட்ட விடயங்களில் மக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகள் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளன. ஆனால் முக்கியமான வடக்கு, கிழக்கு இணைப்பு விடயமானது இந்த அறிக்கையில் பல்வேறு இடங்களிலும் முற்றாக நிராகரிக்கப்படுமொன்றாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைய முடியாது என்றும் அவ்வாறான இணைப்புக்கான சாத்தியத்தை கொண்டிருக்கின்ற அரசியலமைப்பின் 154 A (3) பிரிவு நீக்கப்படவேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கிறது.அதாவது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறையில் ஒரு தீர்வை எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற சாத்தியத்திற்கே இடம் வைக்காமல் மாகாணங்கள் இணைய முடியாது என்ற பரிந்துரை வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் கருத்தறியும் குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு தமிழ்ப் பிரதிநிதிகளில் வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயச்சந்திரன் ஆகியோர் இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இரண்டு மாகாணங்கள் இணையக்கூடிய வகையில் அரசியலமைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஏற்பாடு அகற்றப்படக்கூடாது என்றும் அது அவ்வாறே தொடரவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர். அந்தவகையில் அந்த இரண்டு பிரதிநிதிகளினதும் கருத்துக்களும் குழுவின் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் ஏனைய இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணையக்கூடாது என்பதற்கு பக்கபலமாக இருந்துள்ளமை தெளிவாகின்றது. இந்த இடத்தில் மிகவும் வலுவான முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணையலாம் என்ற விடயத்தை முன்மொழிந்து அதனை இறுதி அறிக்கையில் உள்வாங்கிய இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த அறிக்கையைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அடிப்படை விடயம் நிராகரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது. விசேடமாக தற்போதைய அரசியலமைப்பில் காணப்படுகின்ற தீர்வுத்திட்டமான 13வது திருத்தச் சட்டத்தையே வலுவிழக்கச் செய்வதாக மக்கள் கருத்தறியும் குழுவின் மாகாணங்கள் இணைய முடியாது என்ற பரிந்துரை காணப்படுகின்றது. எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் 13வது திருத்தச் சட்டத்தின் மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியத்தை உருவாக்கிக் கொடுக்கும் 154 A (3) என்ற பிரிவை நீக்குவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். அமைச்சரவைப் பத்திரம் கூட தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன போன்றவர்களின் கடும் தலையீட்டினால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.இந்த நிலையிலேயே புதிய அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவானது இந்த மாகாணங்கள் இணையும் விடயத்தில் ஆக்கபூர்வமான பரிந்துரையை முன்வைக்குமென எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் தற்போது 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையையே சீர்குலைக்கும் வகையில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி வடமாகாண சபையில் முன்வைத்த தீர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக முன்வைக்கும் நிலைப்பாட்டின் அடிப்படைக் கருப்பொருளும் மக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரையில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்துக்கு பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்துடன் தொடர்பு பட்ட வடக்கு மாகாணசபை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நீண்டகால நிலைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை காட்டவேண்டும். அந்தவகையில் மக்கள் கருத்தறியும் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறிப்பிடத்தக்களவு வரவேற்கப்படும் வகையில் அமைந்திருந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயம் தகர்த்தெறியப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது. 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தமிழ் மக்கள் கோருகின்ற தீர்வுத் திட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் செல்ல வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் 13வது திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்து அதற்கும் குறைவான தீர்வுத் திட்டத்துக்கு செல்வதற்கு எவரும் துணைபோகக் கூடாது என்பதனை வலியுறுத்துகின்றோம்.
13வது திருத்தத்தை கேள்விக்குட்படுத்தும் மக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரை

Add Comments