மகாராணியின் காற்சிலம்பைக் களவு எடுத்தவன் கோவலன் என்று முடிவு எடுத்த பாண்டிய மன்னன் எந்தவித விளக்கம் விசாரணையுமின்றி கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கின்றான்.
தன் கணவன் கள்வன் என்ற பெயரால் கொல்லப்பட்டவன் என்ற செய்தி கண்ணகிக்குச் செல்கிறது.
தன் கணவன் இறந்து விட்டானே என்று கண்ணகி வீதியில் விழுந்து அழுது புலம்பினாளன்று -மாறாக நடந்த அநீதி மீது கடும் கோபம் கொண்டாள். என் கணவன் கள்வனா? அவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? ஆத்திரமுற்ற கண்ணகி தலைவிரி கோலத்துடன் பாண்டிய மன்னனின் அரண்மனை நோக்கிச் செல்கிறாள்.
ஒரு பத்தினியாக; நேர்மைத் திறத்துடன் பாண் டிய மன்னனின் அரண்மனை அடைய அங்கு நின்ற காவலர்கள் மன்னனைச் சந்திக்க முடியாது என்று தடுக்கின்றனர்.
இஃதுகாறும் அமைதியாக இருந்தவள் நீதி கேட்டு சண்டமாருதமாகப் புறப்பட்டபோது அதைத் தடுக்க வல்லார் யார்?
காவலர்களின் தடையையும் மீறி பாண்டிய மன்னனிடம் சென்று தன் கணவன் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கிறாள்.
தன் கணவன் கள்வன் அல்ல என்பதை நிரூபிக்கிறாள். அந்த நிரூபணம் தான் செய்தது தவறு என்பதை மன்னனுக்கு உணர்த்த அந்தோ! பாண் டிய மன்னன் இறந்து போகிறான்.
பாண்டிய நாட்டை கண்ணகி தீ மூட்டி எரிக்கிறாள். அவளின் தீயில் தீயன எரிந்து போகின்றன.
அன்று கண்ணகி கோபம் கொண்டதால்தான் கோவலனுக்கு நீதி கிடைத்தது. தீர்ப்பளித்தவன் மன்னன், அவன் அளித்த தீர்ப்புத் தொடர்பில் நாம் எதுவும் செய்ய முடியாது என்று கண்ணகி நினைத்திருந்தால்-கோவலன் கள்ளப்பட்டத்துடன் இறந்திருப்பான். இது போன்ற நீதியற்ற மரணங்கள் பாண்டிய நாட்டில் தாராளமாக நடந் தேறியிருக்கும்.
ஆக, தன் கணவன் கோவலன் அநீதியான முறையில் கொல்லப்பட்டான் என்பதால், வெகுண்டெழுந்த கண்ணகி நீதியை நிலைநாட்டினாள்; நீதி வழங்கத் தவறின் அதன் விளைவு என்னவாக அமையும் என்பதை உலகுக்கு எடுத்தியம்பினாள்.
அதனால்தான் இன்று வரை பத்தினித் தெய்வமாக கண்ணகி போற்றி வணங்கப்படுகிறாள். பத்தினித் தெய்வமாக இன்று எங்கும் பரந்து விரிந்திருக்கும் கண்ணகித் தாயின் வரலாற்றை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
அந்த அறிவு இன்று நீதியை நிலைநாட்டுவத ற்கு அவசியமாகிறது. அந்த நீதி என்பது தமிழ் அரசியல் தலைமைகளை தட்டிக் கேட்பதாக அமைய வேண்டும்.
தேர்தல் காலத்தில் கும்பிடு கோலத்தில் வந்து மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அவர்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்று பதவியைக் கைப்பற்றி விட்டால் எல்லாம் சரி என்று நினைத்துச் செயற்படுவர்களுக்கு உங்கள் கடமையை உரியவாறு செய்யத் தவறினால் நாங்கள் தட்டிக் கேட்போம் என்பதை தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும்.
இதைச் செய்யாதவரை எங்கள் அரசியல் தலை மைகள் ஒரு போதும் திருந்தப் போவதில்லை என்பதால், நீதி கேட்ட கண்ணகித் தாயாக நாமும் மாறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனலாம்.