மட்டக்களப்பு மாவடிவேம்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இராணுவ முகாமில் நேற்று (புதன்கிழமை) மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்றமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவடிவேம்பில் பயன்படுத்தப்பட்ட இந்த இராணுவ முகாம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இராணுவத்தினரால் முன்னர் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகள் வெடித்ததாகவும், முகாமை சுற்றி பலத்த சத்தத்துடன் பெரும் புகைமூட்டம் காணப்பட்டதாகவும், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
தீ விபத்து குறித்து அருகில் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இந்த இராணுவ முகாமில் இன்னும் பல நிலக்கண்ணிவெடிகள் காணப்படுவதாகவும், பல வருடங்கள் ஆகியும் இதனை இராணுவத்தினர் அகற்றாது இந்தப் பிரதேசத்தை ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தி மூடி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
‘மூடி வைக்கப்பட்டிருந்த இந்த இராணுவமுகாமிற்கு பின்புறம் திடீரென தீபிடித்து எரியத்தொடங்கியதுடன், தீ பிரதான பாதையை நோக்கி பரவியுள்ளது. இதன்போது, முகாமிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகள் வெடித்துள்ளன. 15 தடவைக்கு மேல் குண்டுச்சத்தங்கள் வெடித்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் வீதி முழுவதும் பெரும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனால் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.’ என்றும பொதுமக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் தண்ணீர் தாங்கி மற்றும் இராணுவ சிப்பாய்களின் உதவிகளை கொண்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும், இந்தப் பிரதேசம் தொடர்ந்தும் ஆபத்தான பகுதியாக காணப்படுவதனால், தாம் எந்நேரமும் அச்சத்துடன் வாழ்வதாகவும் மக்கள் மேலும் குறிப்பிட்டனர்.