யாழ்.மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளில் நடந்த விரசமான சம்பவங்களால் தமிழ் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இந்த வேதனைக்கான காரணங்கள் பல. அதில் ஒன்று; புனிதமான ஆசிரியர் தொழில் இவ்வாறாகப் பழுதாகி விட்டால், நிலைமை என்னவாகிப் போகுமோ என்ற ஏக்கம்.
இரண்டாவது; மாணவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் இப்படி நடந்து கொண்டால் எங்கள் சமூகத்தில் யாரை நம்புவது என்ற ஆதங்கம்.
மூன்றாவது; மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற பண்பாட்டை உரித்தாகக் கொண்ட தமிழினமாகிய எங்களுக்கு இப்படி ஒரு விதியா? என்ற பரிதவிப்பு.
நான்காவது; ஒரு ஆசிரியர் குற்றம் இழைத்ததால், ஏனைய ஆசிரியர்களும் கைதாகும் பரிதாபம். அதிலும் பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்ற துர்ப்பாக்கியம் என்பது ஆசிரியத் தொழில் என்ற எல்லை கடந்து வீடு, சமூகம் என்ற தளங்களிலும் மிகமோசமான பாதிப்புகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்துதல் என எல்லாமும் சேர்ந்து ஆசிரியத் தொழிலை தெய்வீகமாகச் செய்கின்றவர்களையும் ஏன் தானோ இத்தொழிலுக்கு வந்து சேர்ந்தோம் என்று நினைக்கின்ற சூழ்நிலையை தோற்றுவித்தல்.
இவையாவற்றுக்கும் மேலாக, ஒரு சில பாடசாலைகளில் நடக்கின்ற விரசமான சம்பவங்கள் ஒட்டுமொத்த ஆசிரியத்துவத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விடுமாக இருந்தால், எதிர்கால நிலைமை மிக மோசமாகி விடும் என்பதுடன் பாடசாலை என்ற கட்டமைப்பும் ஒழுங்கு, கட்டுப்பாடு, பழக்க வழக்கம், பணிவு என்ற நியமங்களும் அடிபட்டுப் போய்விடும்.
இது தவிர, தென்பகுதியில் இருக்கக்கூடிய ஆசிரியத்துவம், மாணவர்களின் பணிவு, பெற்றோர்கள் ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் கெளரவம் என்பவற்றை எல்லாம் பார்க்கும் போது எங்கள் மண்ணில் நடக்கின்ற மேற்போந்த விரச சம்பவங்கள் எம் இனம் குறித்த கணிப்பீடுகளைத் தரக் குறைப்புச் செய்து விடுகின்ற சூழ்நிலையைத் தோற்றுவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
எது எப்படியாயினும் குறித்த சம்பவங்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை ஆற்றுப்படுத்துவதும் மாணவர்கள் அச்சமின்றி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான சூழமைவை ஏற்படுத்துவதும் கட்டாயமானதாகும்.
அதேநேரம் ஒரு குற்றச்செயல் நடந்து விட்டது என்பதற்காக கைது என்ற விடயம் அந்தப் பாடசாலையில் இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்குமாயின், அதன் விளைவு மிக மோசமானதாக அமையும் என்பதோடு எங்கள் கல்வியில் அதன் தாக்கம் மிகக் கடும் பாதகத்தைத் தரும்.
ஆகையால் உண்மைகள் மிக நுணுக்கமாக- புலனாய்வு விசாரணை ஊடாக கண்டறியப்படுவதுடன், ஒரு குற்றச்சாட்டை வைத்து எந்த ஆசிரியரையும் அதிரடியாகக் கைது செய்ய முடியும் என்ற விடயம் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டும் என்பதும் நம் தாழ்மையான கருத்து.