தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் எச்சரிக்கையை அடுத்து வடக்கு அமைச்சர் ஒருவர் மீது எதிர்வரும் பதின்நான்காம் கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை குறித்த தரப்பு கைவிட தீர்மானித்து உள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனினும் குறித்த அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆதாரங்களை குறித்த தரப்பு திரட்டி வருவதாக கூறப்படுகின்றது.
அண்மையில் சரவணபவனின் நிகழ்வொன்றுக்காக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த இரா.சம்பந்தன், சரவணபவனின் விடுதியில் மாகாண சபையில் குழப்பங்களை விளைவிக்கும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்ததாக தெரியவருகின்றது.
எந்த தரப்பிலும் ஊழல் இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு மாகாண சபையில் ஊழல் இடம்பெற்று இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் ஊழல் இடம்பெற்று இருந்தால் அதற்கான ஆதாரங்களை எம்மிடம் கையளித்தால் உரிய நடவடிக்கையை எம்மால் எடுக்க முடியும். அதனை விடுத்து மாகாண சபையின் அமர்வுகளில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது சர்வதேச பங்களிப்புடன் இனப்பிரச்சனை தீர்வுக்கான முயற்சிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் எவ்வளவோ விடயங்கள் செய்ய வேண்டி உள்ளன. அவற்றுக்கு முன்னிருமை கொடுக்காமல் தேவையற்ற விதத்தில் மாகாணசபையில் குழப்பங்களை விளைவிப்பதில் முன்னிருமை காட்ட கூடாது. மக்களுக்கு தேவையானவற்றை செய்யுங்கள். குழப்பங்கள் இருந்தால் கட்சியும் கட்சி தலைமைகளும் நடவடிக்கை எடுக்கும் என இரா.சம்பந்தன் அறிவுறுத்தி உள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாண அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு திட்டமிட்ட ஒரு குழு ஒன்று அதற்கான ஆதரவுகளை ஏனைய உறுப்பினர்களிடையே திரட்டும் நடவடிக்கைகளிலும் அந்த குழு தீவிரமாக முயற்சித்து வந்ததோடு, அது தொடர்பிலான பேரம் பேசலையும் முன்னெடுத்திருந்தது.
இதனை முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வடக்கு மாகாண முதலமைச்சர் வெளிப்படையாகவே போட்டுடைத்திருந்தார். இதனால் அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பிசுபிசுத்து போக, அதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடைய கடும் எதிர்ப்பையும் மீறி எதிர்வரும் பதின்நான்காம் திகதி அமைச்சர் ஒருவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் சரவணபவனிற்காக பலியாடாக்கப்பட்ட அருந்தவபாலன் போன்றோர் ஜங்கரநேசனிற்கு எதிரான பிரேரணையை தடுக்க முற்படுவதாக சரவணபவன் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.