
காணாமல் ஆக்கப்படுதலை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து, அதற்கென தனி அலகொன்று உருவாக்கப்படுதல் அவசியம் என்றும், குறித்த அலகு சகல அதிகாரங்களையும் கொண்டதாக அமையவேண்டும் எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சட்டமூலம் ஒன்றை உருவாக்குவதாக கடந்த வருடம் அமைச்சர் மங்களவால் ஐ.நா சபைக்கு உறுதிமொழி வழங்கப்பட்ட போதும், இதுவரை குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லையென, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை பணிப்பாளர் பஷில் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், காணாமல் ஆக்கப்படுதல்களை விரைவில் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இலங்கையில் பலர் பலவந்ததாக காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணை தொடர்பில் சர்வதேசம் தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால், பல கட்டங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும், எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இதனால், குறித்த விசாரணை வெறும் கண்துடைப்பாகவே நடத்தப்படுகின்றதென பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.