இனம் காக்க வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

download (5)
முடிந்தவரை இக் கருத்தினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் பகிருங்கள், இயலுமானவரை எம்மினம் இறப்பதை தடுப்போம்
கடந்த சில வருடங்களாக செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள்,  இணையத்தளங்களில் பரவலாக பகிரப்படுகின்றதும் பேசப்படுகின்றதுமான ஓர் விடயம் முன்னாள் போராளிகள் !!!  இவர்கள் யார் ? எதற்காக போராடினார்கள் ? இவர்களின் இன்றைய நிலை என்ன ? இவர்களின் வாழ்க்கை நிலை கடந்த ஆறரை வருடங்களில் எவ்வகையான மாற்றங்களை அடைந்துள்ளது போன்ற பல வகையான கேள்விகள் எமது மனதில் உதித்தாலும் எம்மில் சிலரே இவற்றுக்கான விடை தேட முயல்கின்றனர் அதிலும் சிலரே இவர்களுக்கான உதவிகளை முழு அளவிலும் பகுதி அளவேனும் பூர்த்தி செய்ய உதவுகின்றனர் ஆனால் பலர் விடை தேட முயலாமலும் விடை தெரியாதவர்கள் போன்றும் நடிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் ஓர் அடையாளத்தினை எட்டுவதற்கு முன்னர் இவர்கள் பல்வேறுபட்ட  சமூக, குடும்ப பின்னணியில் வாழ்ந்தவர்களாக காணப்பட்ட போதிலும் தங்களது இன்ப துன்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழீழம் எனும் ஓர் குறிக்கோளிற்காக உதிரம் சிந்தி போரிட்டவர்கள். எமது மக்களினதும் தலைவரதும் செல்லப்பிள்ளைகளாய் வாழ்ந்து தார்மீக கடமையை நிறைவேற்றுவதற்காக பனி,மழை, வெயில், இரவு, பகல் என காலம் பாராமல் எமக்கும் எம் மண்ணிற்கும் காவல் புரிந்தவர்கள் இவர்கள் விடுதலைப் புலிகளாக வாழ்ந்த காலத்தில் ஓர் ஆடம்பர வாழ்க்கை வாழாவிடினும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட சமமானவர்களாகவும் ஒழுக்கம் மிக்கவர்களாகவும் தலைவனால் வழிநடத்தப்பட்டனர்.
நாம் தமிழர்கள் ஓர் தனித்துவமான பாரம்பரிய வரலாற்று கலாச்சார பின்னணியினை கொண்டவர்கள் எமது உரிமைகள் சிங்கள காடையர்களால் தட்டிப்பறிக்கப்படுகின்றது மற்றும் மறுக்கப்படுகின்றது என்ற உண்மையை இவ்வுலகிற்கு பறைசாற்றியவர்கள் தான் முன்னாள் போராளிகள் இவர்களது தியாகங்களையும் அற்பணிப்புக்களையும் கூறுவதானால் கூறிக்கொண்டே போகலாம் ஆனால் இன்றைய காலப்பகுதியில் நாம் இவர்களை  எவ்வாறு உற்று நோக்கின்றோம் என்பது மிகவும் மன வேதனைக்குரிய விடயமே
உதாரணமாக அண்மைகால சில நிகழ்வுகளை நினைவுபடுத்த விரும்புகின்றேன் முன்னாள் போராளியான சகோதரியின் மரண சடங்கினை செய்வதற்கோ அடக்கம் செல்வதற்கோ போதிய வருமானம் இன்மையாலும் அயலில் வசித்த நம்மவர்களின் உதவியின்மை மற்றும் அவர்களும் உதவி செய்ய கூடிய வருமானம் போதாமை போன்ற காரணத்தால் சகோதரியின் இறுதிக்கிரிகைகள் செய்ய அரசாங்க உதவியை நாடியமை மற்றும் முன்னாள் போராளியான மற்றுமோர் சகோதரி தனது குழந்தைகளின் பசிக்காக விபச்சாரியாக்கப்பட்டமை, மற்றுமோர் சகோதரன் தூக்கில் தொங்கியமை போன்ற பல நிகழ்வுகளை அடுக்கி கொண்டே போகலாம்.
பல நாடுகளை திரட்டி எம்மினத்தின் மீது பேரழிவினை உண்டு பண்ணி 2009ம் ஆண்டு தான் போர் வெற்றி பெற்றதாக சிங்களம் மார்தட்டிக் கொண்டு திரியும் இக்காலத்தில் தமிழ் மக்களாகிய எமக்கு தமிழீழம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதை காத்த காப்பாற்ற போரிட்ட எமது சகோதர சகோதரிகளாகிய முன்னாள் போராளிகளும் முக்கியமே 2009ம் ஆண்டிற்கு பின்னர் எமது போராட்ட வடிவத்தினை மாற்றி சர்வதேசத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக எமது தமிழீழத்தினை பெறவே தற்போது நாம் எமது முயற்சிகளை நகர்த்தி வருகின்றோம், இவ்வாறான ஒர் சூழலில் எமக்கு கிடைத்துள்ள இடைவெளியில் எமது நலிவடைந்த சமூகத்தையும் சமூகத்தினை காத்த முன்னாள் பேராளிகளையும் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை புலத்திலும் ஈழத்திலும் வாழ்கின்றவர்கள்  முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது அவா, அதற்காக நான் யாரும் உதவிகளை செய்யவில்லை என இங்கு குறிப்பிடவில்லை எம் தலைவன் தமிழீழ போரை வழிநடாத்திக் கொண்டிருந்த போது கிடைத்த உதவிகளும் உதவிக்கரங்களும் மூன்றில் ஒரு (1/3) மடங்காக குறைந்துவிட்டது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை காரணம் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மெளனித்து விட்டன எமக்கான தமிழீழத்தினை இனி எவ்வாறு பெறுவது போன்ற ஓர் குழப்பமான சூழலேயாகும்
இவ்வாறனதோர் நகர்வு எமது இனத்தின் விடியலை இன்றும் பின் நோக்கி கொண்டு செல்கின்றது என்பது கசப்பான உண்மை. இவ்வாறான சூழ்நிலையிலும் ஈழத்திலும் புலத்தில் வாழ்கின்ற உறவுகள் சிலர் இவ்வாறான உதவிகளை தனிப்பட்ட ரீதியில் தங்கள் உறவினர்களுக்கும், சமூகத்திற்கும், பாடசாலைகளுக்கும், முன்னாள் போராளிகளுக்குமாக செய்து வருகின்றனர் இருந்தாலும் இராணுவ கெடுபிடிகள்போன்ற காரணங்களினால் எமது சமுகத்தை சார்ந்தவர்களை முன்னாள் போராளிகளை ஒதுக்குவதும் உதவி செய்ய தயங்குவதும் வேதனையான விடயமே அவர்களும் எமது சகோதரர்கள் தான் ராணுவ கெடுபிடிகளும் நாம் தொன்றுதொட்டு அனுபவிப்பவையே இவ்வாறனதோர் சூழ்நிலையில் தான் நாம் எம்மால் இயன்ற உதவிகளை நாம் அவர்களுக்கு செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணருங்கள் காரணம் இதை விட இறுக்கமான சூழ்நிலையிலும் உங்களை பாதுகாத்தவர்கள் அவர்கள்.
ஈழத்தில் உதவும் நிலையில் உள்ள உறவுகளே புலத்தில் உதவிய உதவும் நோக்கில் உள்ள உறவுகளே வருகின்ற May 2016 உடன் எம்மினம் சிதைக்கப்பட்டு 7 வருட பூர்த்தியை சிங்களம் கொண்டாட உள்ள சந்தர்பத்திலாவது எமது போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த குறைந்தது ஒரு போராளிக்கான உதவியாவது செய்ய திடகாத்திரமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே எமது அவா, எம்மில் பலர் தேவையற்ற கேளிக்கை நிகழ்வுகளை பெரிய தொகை பணத்தினை செலவிட்டு நடாத்துகின்றோம் அவ்வாறான சூழ்நிலையிலாவது எமது உறவுகளை பற்றி சிந்தியுங்கள். நாம் அனைவரையும் பணத்தினை திரட்டவும் கூறவில்லை தொழில் வாய்ப்பு வழங்க முடியுமானால் முயலுங்கள், தொழில் வாய்பினை ஏற்படுத்தகூடிய உபகரணங்கள் உங்களிடம் மேலதிகமாக உள்ள தாயின் கொடுத்துதவுங்கள், பாதுகாப்பான சூழலில் உள்ளவராயின் உங்களால் உங்கள் சூழலில் உள்ள விபரங்களை திரட்டி உதவ முன்வருபவர்களுக்கு வழங்குங்கள் அல்லது அவர்களை அணுக பாதுகாப்பான வழிமுறையை வழங்குங்கள், உதவிகளும் உரிய நபருக்கு கிடைத்துள்ளதா என்பதனை உறுதிப்படுத்துங்கள்
முடிந்தால் உங்கள் பிரதேசத்தில் வாழும் நலிவுற்ற நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டி உங்கள் பிரதேசத்தில் வாழும் பாரளுமன்ற  உறுப்பினர்கள்,தொண்டு நிறுவனங்கள்,  புலத்தில் உள்ள உறவுகள் மூலமாகவும் உதவிகளை பெற்றுக்கொடுக்க முயலுங்கள். இலக்கை அடைய உறுதியான சமூகத்தினை கட்டி எழுப்புவதன் உள் நோக்கை அனைவருக்கும் தெளிவு படுத்துங்கள்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila