மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் கையாளப்படுமானால் இனவாத பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளியெறிந்துவிடமுடியும்.
இனரீதியான, மதரீதியான வன்முறைகளை தூண்டுபவர்கள் சரியான முறையில் இனங்காணப்பட்டு கைதுசெய்யப்படவேண்டும்.
முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மீள நிகழாமையினை உறுதிப்படுத்த அரசாங்கத்துடன் இருக்கும் முஸ்லிம் தலைமைகள் தமது பணியை மேற்கொள்ளவேண்டும்.
ஒரு இனம் இன்னுமொரு இனத்தினை பாதிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்ற ஒருமித்த கருத்தில் மிக கவனமாக அரசியல்வாதிகள் உள்ள நிலையில் அந்த கரிசனை தமிழ் மக்கள் மீதும் அவர்களுக்கு இருக்கவேண்டும்.
இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போதெல்லாம் அதற்கு எதிராக போராடியவர்கள் தமிழ் தலைவர்களாகும். இதனை யாரும் மறுக்கமுடியாது.
மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபோதும் புத்தளத்தில் முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டபோதும் அதற்கு எதிராக தந்தை செல்வா அவர்கள் குரல்கொடுத்தார்.
சிறுபான்மை மக்களாக இருக்கலாம் பெரும்பான்மை மக்களாக இருக்கலாம் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் அவர்கள் பாதிக்கப்படும்போதேல்லாம் தமிழ் தலைமைகள் குரல்கொடுத்துவந்துள்ளனர்.
கடந்த மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதுடன் அங்கு பன்றி இறைச்சிகளும் வீசப்பட்டன.
அந்தவேளையில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் எழுப்பி போராடியவர்கள் தமிழ் தலைமைகளாகும்.
மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் பல முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். பதவியினை துறக்கவில்லை.
அதேபோன்று இன்றும் கண்டி, அம்பாறையில் முஸ்லிம் மக்களின் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது.
இனவாதிகளின் மதவாதிகளின் கலவரத்தில் சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாங்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக பேசுகின்றோம். எமது தமிழர்கள் பல வகையிலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொன்றுகுவிக்கப்பட்டவேளையில் அதற்கு எதிராக யாரும் குரல்கொடுக்கமுன்வரவில்லை.
முள்ளிவாய்க்கால் கொத்துக்கொத்தாக கொத்துக்குண்டுகளை வீசி அப்பாவி மக்களை பலியெடுத்தபோது யுத்ததில் பங்கெடுக்காத ஆயிரக்கணக்கானோர் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.
அந்தவேளையில் மற்றைய இனத்தினை சேர்ந்த எந்த அரசியல்வாதிகளும் அதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை. மிகவும் வேதனையான விடயமாகும்.
எங்களுக்காக பேசாதவர்கள் தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது பால்சோறு, குளிர்பானங்கள் வழங்கி, தேசிய கொடிகளை பறக்கவிட்டு கொண்டாடியவர்களே இந்த நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் அவ்வாறு ஒருபோதும் நினைக்கவில்லை.
ஒரு இனம் அழியும்போது, ஒரு இனம் அழிக்கப்படும்போது, இன்னுமொரு இனம் அதன் தலைமைத்துவங்கள் அதனை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம்.
ஒரு இனத்தின் கண்ணில் இருந்து நீர்வடியும்போது அதனை துடைப்பதற்கு மற்றைய இனம் சார்ந்த தலைவர்களின் கைகள் நீளவேண்டும். இந்த நாட்டிலே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றபொழுது அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி, பிரதமர் எல்லோரும் சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சிங்கள மக்கள் பாதிக்கப்படுகின்றபொழுது நாங்கள் எல்லோரும் கட்சி பேதங்களை மறந்து அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேவர்தன கூறினார்.
இவ்வாறு பேசுகின்ற அரசியல் தலைவர்களை நான் வரவேற்கின்றேன். ஆனால் கடந்த காலங்களில் எமது தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டபோது பல தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன.
2009ல் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு கூட யுத்தத்தில் தமது அவயவங்களை இழந்த, சொத்துகளையும் உடமைகளையும் இழந்த தமிழ் மக்கள் மீள தங்களுடைய சொந்த பிரதேசங்களில் குடியேறி படிப்படியாக தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முற்படுகின்றபொழுது அவர்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலந்தனை மடுவில் 4000ஏக்கர் காணி, ஏறாவூர்பற்று பிரதேச சபையின் மேசக்கல்லிலே தமிழ் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான 1100 ஏக்கர் நிலப்பரப்பும் இரவோடு அரவாக அபகரிக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் தளவாயில் 450ஏக்கர் காணிகளை அடாத்தாக கைப்பற்றி அங்கிருந்த பனைமரங்களை எரியூட்டிய சம்பவம் நடைபெற்றது. அவ்விடயத்தில் தலையீடு செய்த மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் விமல்ராஜ் அவர்கள் சுடப்பட்டார்.
தளவாய் விக்னேஸ்வரா பாடசாலை மைதானக் காணிகூட அபகரிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் சுமூகமாக பேசி அந்தக் காணியை மீள பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்திருந்தோம்.
மயானக்காணிகள் கூட உரிமை கொண்டாடப்படுகின்றன. நாளை எமது வீட்டு முற்றம்கூட பறிபோகும் அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர்.
எங்களுடைய மக்களின் காணிகளை அபகரிக்கின்ற இந்த செயற்திட்டத்தின் பின்புலத்தில் இருப்பவர்கள் மாற்று சமூகத்தில் இருக்கின்ற ஒருசிலர் காணிகளை அபகரிக்க முற்படும்பொழுது ஒருசில அரசியற் பின்புலங்களும் செயற்படுகின்றன.
1963ஆம் ஆண்டுகளில் அம்பாறையில் 24சதவீதமாக இருந்த தமிழ் மக்களின் விகிதாசாரம் 2001ஆம் ஆண்டிலே 17சதவீதமாக குறைந்திருக்கின்றது.
இதற்குக் காரணம் 1986ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 19ஆம் திகதி ஊர்காவற்படை சேர்ந்து நிகழ்த்திய உடும்பன்குளம் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, கல்முனை படுகொலை, வீரமுனை படுகொலை போன்ற கூட்டுப்படுகொலைகளாகும். இதனால் தமிழ் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர்.
இந்த நல்லாட்சியை ஏற்படுத்தியதில் எமது தமிழ் மக்களுக்கு பாரிய பங்களிப்பு இருக்கின்றது. இன்றுகூட அம்பாறையில் காணி அபகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்டதான கண்டக்குளிக்குளம் பகுதியை அண்டியதான 70ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டிருக்கின்றது.
தர்மரத்தினம் வன்னியாருடைய குடும்பச் சொத்தாக இருந்த பல காணிகள் இன்று மாற்று சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒருசில அதிகாரிகள் காணி உறுதிகளை ஏற்றவகையில் முடித்துக்கொடுக்கின்றமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அரசகாணிகளைக்கூட விற்கக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். பல அதிகாரிகள் பொறுப்பற்றவிதத்தில் நடந்துகொள்கின்றனர்.
மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களுக்கு சொந்தமாக அட்டப்பள்ளம் பகுதியிலிருந்த மயானக் காணியின் 14ஏக்கர் பரப்பு காணி 2017ல் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காணியென உரிமை கோரியிருந்தார். அன்று அந்த மக்கள் 12ஏக்கர் காணியை அவருக்கு விட்டுக்கொடுத்திருந்தனர்.
கடந்த மாதம் மிகுதியாக இருந்த 02ஏக்கர் காணியைக்கூட அடாத்தாக அவர் வேலிபோட்டு அடைக்க முற்பட்டபோது மக்கள் அதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த முற்பட்டனர்.
பொலிஸார் அவர்களை மாலைவரை பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்து சட்டத்தின் முன் நிறுத்தி மூன்று நாட்கள் அவர்களை சிறையில் அடைத்திருந்தனர் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.