சவுதி அரேபியாவில் உள்ள சட்டங்களில் ஒன்று பாதிக்கப்பட்டவருக்கே மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உண்டென்பதாகும்.
ஒரு வழக்குத்தொடர்பில் நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினாலும் விதிக்கின்ற தண்ட னையை குறைக்கின்ற அல்லது அடியோடு தள்ளுபடி செய்கின்ற அதிகாரம் பாதிக்கப்பட்ட தரப்புக்கு உள்ளது.
நீதி உலகில் இந்த நடைமுறை மிகவும் உன்னதமானது என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் பாதிக்கப்பட்ட தரப்பே நிவாரணம் பெறக் கூடியது. ஆக, குற்றமிழைத்தவருக்கு நாட்டின் தலைவர் அல்லது அரசியல் தலைவர்கள் மன்னிப்பு வழங்குவதென்பது எந்த வகையிலும் பொருத்துடையதல்ல.
எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு வழங்குகின்ற அதிகாரத்தைக் கொண்டவர்களாக இருப்பது நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமாக இருப்பதுடன் தண்டனைகள் குறைவடைவதற்கும் குற்றமிழைத்தவர்கள் திருந்துவதற்கும் வழிவகுக்கும்.
எனினும் இலங்கையில் போரினால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்பில் யாருமே அக்கறை கொள்வதாக இல்லை. தமிழ் அரசியலைப் பொறுத்த வரை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை அரசியல்வாதிகள் மேடைகளில் கூறி வாக்குப்பெற்று பதவிக்கு வருகின்ற நிலைமையே உள்ளது.
பதவிக்கு வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் போர் பாதிப்புக்கு உள்ளானவர்களை திரும்பியும் பார்ப்பதில்லை.
இதுபோல, போரில் ஈடுபட்டு அங்கவீனமாகிப் போன முன்னாள் போராளிகள் இன்று வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் புலிப் போராளிகளுடன் கதைப்பது; அவர்களுடன் நட்பு வைத்திருப்பது; விடுதலைப் புலிகளின் செல்வாக்கு தமக்குத் தாராளமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதை எல்லாம் பெருமையாகக் கருதிய எவரும் இப்போது முன்னாள் புலிப் போராளிகள் குறித்தோ, மாவீரர் குடும்பங்களின் அவலங்கள் குறித்தோ திரும்பிப் பார்ப்பதில்லை.
இந்நிலைமைக்கு அப்பால், அரசியல் பதவிக ளில் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கேனும் இடம்கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை. நிலைமை இதுவாக இருக்கையில், போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நெடுந்துயர் தணிவது கடினமே.
எதுவாயினும் காணாமல்போனோர் தொடர்பில் அமைக்கப்பட்ட அலுவலகத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இது தொடர்பில் பாதி க்கப்பட்டவர்களின் கருத்து உள்வாங்கப்படுவது முக்கியம் என்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இந்நிலைப்பாடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலைத் தருகிறது. பொதுவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, நிவாரணம் என்பன தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெறாமல் அரசியல் தலைவர்களும் படைத்தரப்புகளும் அதிகாரிகளும் கூடிமுடிவெடுப்பதென்பது எந்த வகையிலும் நீதியாகாது.
எனவே, பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும் அவர்களின் பங்கேற்புகளும் மிகவும் அவசியம் என்பதால் இதை நம் அரசியல் தலைமைகள் வலியுறுத்தி அமுலாக்க வேண்டும்.