மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பிரதேசத்திலுள்ள மக்கள் வாழ்ந்த 2500 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் பறிக்கப்பட்டு, அம்மக்களுக்கு முள்ளிக்குளத்திற்கருகிலுள்ள காட்டுப்பிர தேசத்தில் இந்திய வீட்டுத் திட்டத்தின்கீழ் வீடு அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
மக்களுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் காணிகளை 2007ஆம் ஆண்டிலிருந்து சிறீலங்கா கடற்படையினர் கைப்பற்றி வைத்துள்ளனர். இதுவரை அப்பிரதேசத்தில் அம்மக்கள் குடியேறுவதற்கு கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகின்றனர்.
யுத்தம் காரணமாக 2007ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி அப்பிரதேசத்தை விட்டு வெளியேறிய மக்கள் முருங்கன், தாழ்வுபாடு, நானாட்டான் ஆகிய பிரதேசங்களில் தங்கி வாழ்கின்றனர்.
2014ஆம் ஆண்டு முள்ளிக்குள மக்களை அவர்களது சொந்த இடத்தில் குடியேற்றுமாறு மன்னார் மாவட்ட ஆயர் யோசப் இராயப்பு ஆண்டகை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியபின்னர் 600 ஏக்கர் வயல் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது முள்ளிக்குள மக்கள் தற்காலிகமாக வசிக்கும் முள்ளிக்குள காட்டுப்பகுதியில் 81பேருக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.