இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு, இராணுவத்தினரும் பொதுமக்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் கொள்கைகளை பின்பற்றவில்லையென்றும், பொதுமக்களை காப்பாற்றியே பிரச்சினைக்கு தீர்வுகண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர், தனிப்பட்ட சிலர் குற்றமிழைத்திருந்தால் அதற்கான ஆதாரங்களை திரட்டி அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறாமல் அரசாங்கம் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கையில், அதற்கு குந்தகம் விளைவிக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென அமைச்சர் மஹிந்த மேலும் தெரிவித்தார்.
அந்தவகையில், யுத்தக் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதி விசாரணை குழுவினருக்கு இடமளித்து நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் செயற்பட முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். யுத்தக் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிவிசாரணை குழுவினருக்கு அனுமதியில்லையென ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில், அதுவே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்றும் இவர்களை தவிர்த்து ஏனையோர் வெளியிடும் கருத்துக்கள், அவர்களது தனிப்பட்ட கருத்துக்களாகவே அமையும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
யுத்தக் குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமென பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்கள் சார்பாக குரல்கொடுத்து வரும் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகையில், அமைச்சர் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளமையானது நீதியை எதிர்பார்த்து நீண்டகாலம் காத்திருக்கும் மக்களின் நம்பிக்கையை சிதறடிப்பதாக அமைந்துள்ளதென சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.