
நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்துவரப்போ வதில்லை என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தத் தகவலை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மை்த்ரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் ஊடாக யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சில ஊடகங்களும், கூட்டு எதிர்கட்சியினரும் மக்களை குழப்புவதற்காக பிழையானத் தகவல்களை பரப்பி வருவதாகவும் மங்கள் சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொது நிர்வாக அபிவிருத்தி நிலையத்தில் நேற்றைய தினம் அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெறும் அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டிற்கு சிறப்பு அதீதியாக அழைக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய நாட்டை சரியான பாதைக்கு எடுத்துவருவதற்கான சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
இதன்மூலம் நாட்டினதும், மக்களினதும், இராணுவத்தினரிதும் நற்பெயருக்கு கடந்தகால ஆட்சியில் ஏற்பட்டிருந்த களங்கத்தை நீக்கி நற்பெயரை காப்பாற்ற முடிந்ததாகவும் அமைச்சர் மங்கள் பெருமிதம் வெளியிட்டார்.
நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களும் இணைந்து நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுத்த போதிலும், சுதந்திரத்திற்குப் பின்னர் இன, மத, மொழி ரீதியாக பிரிந்தது மாத்திரமன்றி, விருப்பு வாக்குத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சாதி வாரியாகவும் பிளவுபட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிளவுகளால் இறுதியில் நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய 30 வருட யுத்தத்தாலும், இரத்த ஆற்றை பெருக்கெடுக்கச் செய்த இரண்டு ஆயுதப் போராட்டங்களும் நாட்டு மக்களை தொடர்ந்து பிளவுபடச் செய்ததுமே இறுதியில் எஞ்சியதாகவும் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இவற்றிலிருந்து நாட்டை மீட்க வேண்டியது இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது தமது அரசு மூன்று முக்கிய விடையங்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாகவும் கூறிய வெளிவிவகார அமைச்சர், ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற தலைப்பில் இவற்றைய முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது குறித்த சர்ச்சை தொடர்பிலும் அமைச்சர் மங்கள கருத்துக்களை முன்வைத்தார்.
வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட மங்கள சமரவீர, இந்த விடையம் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியும், பிரதமரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவதில்லை என்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் இறுதி முடிவல்ல என்று ஜெனீவாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய போது வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்திருந்தார்.
அது மாத்திரமன்றி உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுநர்களை இணைத்துக்கொள்வது குறித்த .நா தீர்மானத்தின் பரிந்துரைகளை குறித்த பொறிமுறையை அமைக்கும் போது ஸ்ரீலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்களை நாடு திரும்பிய நிலையில் கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் மங்கள சமரவீர மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும் மங்கள சமரவீரவின் இந்த அறிவிப்பு உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அனுமதிப்பது மாத்திரமன்றி நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் முயற்சியென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரது தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் மற்றும் பேரினவாத சிங்கள பௌத்த பிக்குகள் தலைமையிலான அமைப்புக்கள் குற்றம்சாட்டியதுடன், கடும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.
அது மாத்திரமன்றி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேனவின் கூற்றுக்கள் அரசாங்கத்தின் இறுதி முடிவாக கருதப்படும் நிலையில், அவற்றை உதாசீனம் செய்து ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் செயற்படுவதாகவும் மஹிந்த தரப்பு குற்றம்சாட்டி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.