நடுங்கவைக்க ஒற்றை வார்த்தை! - புகழேந்தி தங்கராஜ்!!

pugalenthi_tangaraj.jpg

மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபாலா சிறிசேனாவும் சேர்ந்து இலங்கையை ரத்தக்களரி ஆக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் –  என்கிற நம்முடைய கணிப்பு சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. சென்றவார இறுதியில் கொழும்பில் நடந்த நாடகங்கள் இதை உறுதி செய்கின்றன.
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கவும், அந்தத் தீர்ப்பாயத்தில் சர்வதேச  நீதிபதிகளுக்கு இடம்கொடுக்கவும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டுவிட்டதாக பிரபல சிங்கள நாளேடான  திவயின ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்திதான் இந்த நாடகத்தின் முதல் காட்சி.
அடுத்த காட்சி, பெரதனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் மைத்திரி வைத்த ஒப்பாரி. ‘இப்படியொரு பொய்ச் செய்தியை வெளியிடுவதற்கு முன் அரசுத்தரப்பை ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா? ஊடகங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தக் கூடாது’ என்பது அவரது புலம்பல்.
“நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதை நான் அனுமதிக்கவே மாட்டேன். ஒன்பது மாதத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய போர்க்குற்றத் தீர்ப்பாயம் – என்கிற செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை. இலங்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்க, அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை” இதெல்லாம் மைத்திரியின் பெரதனியா பேச்சின் முக்கியப் பகுதிகள்.
மைத்திரியின் நிஜ முகத்தைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு அவரது பெரதனியா பேச்சு புதிதல்ல! ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில் நின்று, தமிழர்களின் வாக்குகளால் மட்டுமே ஜெயித்தவர் அவர். ஜெயித்த உடனேயே, ‘மகிந்தனை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியது நான்தான்’ என்று வெட்கமேயில்லாமல் பிரகடனம் செய்ததும் அவர்தான்!
சீன ஆதரவாளனான ராஜபக்சவை ஒதுக்கிவைக்க மைத்திரியைப் பயன்படுத்தியது அமெரிக்கா. இனப்படுகொலைக் குற்றத்துக்கான குற்றவாளிக் கூண்டிலிருந்து ராஜபக்சவைக் காப்பாற்ற, இந்தியா மைத்திரியைப் பயன்படுத்தியது.  தேர்தல் தோல்வி என்கிற தண்டனையே ராஜபக்சவுக்குப்  போதுமென்பதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் வாக்குகள் மூலம் அந்த மிருகத்தைத் தோல்வியடையச் செய்து, முழுமுதற் குற்றவாளியான இலங்கையைக் காப்பாற்ற இன்றுவரை தலைகீழாக நிற்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இந்த வாதப் பிரதிவாதமெல்லாம் கூட இப்போது வேண்டாமென்று நினைக்கிறேன். சுற்றிவளைக்காமல் மூக்கைத்தொட, ஓரிரு கேள்விகளே போதும்!
இலங்கையின் நீதிமன்ற நடவடிக்கைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற அரசியல் சாசனம் அனுமதிக்காது என்கிற விஷயம் மைத்திரிக்கு இதற்கு முன்பே தெரியுமா தெரியாதா? ஒரு நாட்டின் அதிபருக்கு இதெல்லாம் தெரியாதென்றால், அதைக் காட்டிலும் கேவலம் வேறெதுவுமில்லை.
அதிபருக்கு இதெல்லாம் எப்போதோ தெரியும் – என்று இலங்கை நீட்டிமுழங்கினால்,  ‘சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை – என்கிற ஜெனிவா தீர்மானத்தை இலங்கை வழிமொழிந்தபோது, மைத்திரியின் வாயில் லாலிபாப் இருந்ததா’ என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
சர்வதேச அரங்கு ஒன்றில், சென்ற ஆண்டு கொடுத்த வாக்குறுதியைத்தான் இந்த ஆண்டு மறுக்கிறது இலங்கை. அந்த வாக்குறுதியை நிறைவேற்றமாட்டோம் – என்று பகிரங்கமாக அறிவிக்கிறது. சென்ற ஆண்டு அந்த அவையில் இலங்கை வாக்குறுதி கொடுத்தபோது கைத்தட்டிய இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேசமும், இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றன? தேன் – என்று எழுதிக்கொடுத்த பேப்பரை நக்கிப்பார்த்துவிட்டு நகரச் சொல்கிறார்களா நம்மை?
பெரதனியாவில் பேசுகிறபோது, “War Crime Tribunal என்று ஐ.நா.வே சொன்னதில்லை” என்று மைத்திரி குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. ஐ.நா.சொன்னதையோ ஐ.நா.வுக்குக் கொடுத்த வாக்குறுதியையோ நிறைவேற்றுகிற ஒரு நாட்டுக்கு இப்படியெல்லாம் பேச உரிமை இருக்கிறது. ஐ.நா.வின் முன் கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்ற மறுக்கிற ஒரு இழிபிறவிக்கு இப்படியெல்லாம் பேச என்ன தகுதி இருக்கிறது?
உண்மையில், இந்த WAR CRIME TRIBUNAL யோசனையை முன்வைத்தவர், வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன்தான்!  வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அந் நாட்டின் அரசியல் சட்டம் முட்டுக்கட்டையாக இருக்கும் – என்பதைச் சொல்லியே, ‘TRIBUNAL தான் சரி, வெளிநாட்டு நீதிபதிகள் அதில் பங்கேற்க முடியும்’ – என்று அவர்தான் சுட்டிக்காட்டினார்.
வழக்கம் போலவே, நம் கூடவே இருந்து குழிபறிக்கிற மேதாவிகள், அந்த அறிவார்ந்த யோசனை குறித்து விமர்சித்தனர். விக்னேஸ்வரன் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்போது திவயின செய்தியைப் படித்துவிட்டு, மைத்திரி பதறுகிற ஒரு நிலையை விக்னேஸ்வரனின் அந்த ஒற்றை வார்த்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திவயின செய்தியின் பின்னணி, விக்னேஸ்வரனின் யோசனைதான். ஆனால், அந்தச் செய்தி வெளியானதன்  பின்னணி,   ராஜபக்சவாக இருக்கக் கூடும்.  ‘9 மாதத்தில் டிரிப்யூனல், 9 மாதத்தில் வெளிநாட்டு நீதிபதிகள்’ என்றெல்லாம் செய்தி வெளியாவது ராணுவ மிருகங்களை நிச்சயமாக பீதியடைய வைக்கும். ஈவிரக்கமில்லாமல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, தமிழர்களைக் கொன்றுகுவித்த அந்த மிருகங்களைத் தூண்டிவிட்டு, ஒரு ராணுவப் புரட்சி மூலம் மைத்திரியைக் கவிழ்க்க மகிந்த மிருகம் முயல்கிறதோ என்கிற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த இந்தியா, தன்னுடைய வாலில் தானே கொள்ளிவைத்துக் கொண்டதைப் போல் ஆகிவிடும். அந்த ராணுவப் புரட்சியை முறியடிக்க சர்வநிச்சயமாக அமெரிக்கா ஓடிவரும். ராணுவப் புரட்சிக்கு ஒத்துழைக்க சீனா ஓடிவரும். இரண்டு மிருகங்கள் மோதினால், அந்தக் குட்டித்தீவு  ரத்தக்களரி ஆகுமா ஆகாதா?
இந்த யூகம் ஒருபுறம் இருக்கட்டும்! நமது ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்க இலங்கை செய்கிற  மோசடிகளைப் பார்த்துக்கொண்டே பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே, நாம் மிருகங்களா, மகிந்தனும் மைத்திரியும் மிருகங்களா?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila