போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்த மாட்டோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இச் செவ்வி தமிழ் மக்களை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது.
வன்னி பெரு நிலப்பரப்பில் நடந்த மிக கொடூரமான போரும் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்தழிவுகள், அங்கவீனங்கள் என்ற ஏகப்பட்ட துன்பங்களுமாக தமிழ் மக்களைப் பேதலிக்க வைத்துக் கொண்டி ருக்கும் இந் நேரத்தில் தமிழ் மக்களின் மன ஆறுதல் என்பது வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெறும் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமாகவே உள்ளது.
இருந்தும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதற்கு இலங்கை அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதை அனுமதிக்கமாட்டேன் என்று இந் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியபோது தமிழ் மக்களின் நாடி நரம்பெல்லாம் நடுங்கிக்கொண்டது.
அட! எங்கள் வாக்கைப்பெற்று பதவிக்கு வந்தவர் சிங்கள மக்களுக்கு இப்படியொரு வாக்கைக் கொடுக்கிறாரே என்ற மன வேதனையின் வெளிப்பாடே நாடி நரம்புகளின் உதறலாயிற்று.
சரி, முன்னைய சிங்கள ஆட்சியாளர்கள் செய்ததை; இனிமேல் ஆட்சிக்கு வரப்போகிறவர் செய்யப் போவதை; நிகழ்கால ஆட்சியில் இருப்பவர் சொல்கிறார் - செய்கிறார்.
இஃது எல்லாம் வழமை என்று மெளனமாக இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரியின் வார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தக்க பதில் கொடுப்பார் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.
ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என அரசாங்கத்தை நாம் கேட்கமாட்டோம் என இரா.சம்பந்தர் சிங்கள ஊடகத்திற்கு செவ்வி கொடுத்த செய்தியை அறிந்தபோது,
ஐயா! அவருடையது இனத்தின் வழமை. இவருடையது மகாகொடுமை என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியவில்லை.
எதுவாயினும் நான் ஜனாதிபதியாக இருக் கும் வரை போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதானது,
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அனுமதியைப் பெற்றுக் கூறப்பட்டது என்று அனுமானிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
இந்த அனுமானத்தின் ஆதாரம்தான் சிங்கள ஊடகத்திற்கு சம்பந்தர் ஐயா வழங்கிய செவ்வி.
என் செய்வோம்! தமிழனே தமிழனுக்கு மாரகனாகி விட்டபோது...