வலிகாமம் வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலய நிலங்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டாலும் இராணுவத்தினரின் அண்மைய அறிவிப்பு அதிர்ச்சி தருகின்றது. அதாவது, படையினர் தமது தேவைக்காக கையகப்படுத்திய ஆறாயிரம் ஏக்கர் நிலங்களில் 1200 ஏக்கர்கள் மட்டுமே விடுவித்துள்ளனர். மிகுதியாக படையினர் வசமிருக்கும் நிலங்களை எப்போது விடுவிப்பது என்பது தொடர்பாக எதையும் வெளிப்படுத்தாத படையினர், தமது தேவைக்கு அவசியமான நிலங்களை தொடர்ந்தும் தம் வசமே வைத்திருப்பார்கள் என்று கூறியிருக்கின்றனர்.
தாம் வைத்திருக்கும் நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கு மாற்று அரச காணிகள் பகிரந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்கள். படையினரின் இந்த அறிவிப்புக்கு அச்சாரமாகவே, அண்மையில் காங்கேசன்துறை சீமெந்து ஆலைக்குச் சொந்தமான காணிகளில் ஒரு பகுதியை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான நிலங்களை பகிர்ந்தளிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்தபோது தமிழ் மக்களும் காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு தம்மை பெயர்ப்பதிவு செய்து கொண்டார்கள். அங்கு வழங்கப்படுகின்ற நிலங்கள் யாருக்கு வழங்கப்படப் போகின்றது என்பதை அரசாங்கம் தெளிவாக அறிவிக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு புதிதாக காணிகள் வழங்கப்படவுள்ளதா? அல்லது உயர் பாதுகாப்பு வலயங்களில் நிலங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு மாற்றாக தற்காலிகமாக நிலங்கள் வழஙக்கப்படவுள்ளதா? அல்லது உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேரந்தவர்களுக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் காணிகள் நிரந்தரமாகவே வழங்கப்படப் போகின்றதா? என்பதை இதுவரை அரசாங்கம் தெளிவாக கூறவில்லை.
ஆனால் சீமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகளில் மக்களை குடியேற்றுவது தொடர்பாக கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. அதாவது அந்த நிலமானது மக்கள் விவசாயம் செய்வதற்கோ, நல்ல குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கோ உகந்ததல்ல என்றும் அந்த நிலமானது கீழே சுன்னாம்புக் கற்களும், முறுகக் கற்களும் படர்ந்து காணப்படும் நிலப்பரப்பாகும் என்பதுதான் அந்த கண்டனங்களுக்கு காரணமாகும்.
சீமெந்துத் தொழிற்சாலைக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கு பகிரந்தளிப்பதாக அரசாங்கம் பரபரப்பாக ஆரம்பித்த அந்த வேலைத்திட்டம் மெதுவாக பின்னடைவு கண்டபோதே அரசாங்கத்தின் இன்னொரு அறிவிப்பு வெளியாகியது.
அதாவது, காங்கேசன்துறை, கட்டுவன், குறும்பசிட்டி, நடேஸ்வராக்கல்லூரி பகுதிகள் உள்ளடங்களாக 201 ஏக்கர் உயர் பாதுகாப்பு வலய நிலங்களை அரசாங்கம் உரியவர்களிடம் ஒப்படைப்பதாக அறிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற மக்களுக்கு இன்னொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அங்கு வீதி போக்குவரத்துச் சபை ஏற்கென தார்வீதியாக அமைத்திருந்த பிரதான் வீதியை தமது பகுதிகளுக்குள் எடுத்துக் கொண்டுள்ள படையினர் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு மக்கள் சென்று வருவதற்கு காட்டுப்பாதையையும், சிலரின் நிலங்களையும் ஊடரறுத்து தமது கனரக வாகனங்களைப் பயன்படுத்தி அமைத்திருந்த மணல் வீதியை போக்குவரத்துக்கு வழங்கியிருந்தார்கள்.
அப்படி ஒரு வீதி அமைவதற்கு பூகோள ரீதியாகவே அப்பகுதியில் வாய்ப்புக்கள் இல்லை. தவிரவும் அப்படி ஒரு வீதியை அமைப்பது தொடர்பாக வீதி அதிகார சபைக்கோ, பிரதேச செயலகத்திற்கோ படையினர் முறையாக அறிவித்திருக்கவில்லை. அது படையினர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த அத்துமீறலாகவே இருக்கின்றது.
யுத்தத்தை வெற்றிகொண்ட படைகள் என்பதற்காக அவர்கள் கைப்பற்றிய பகுதிகளும், உடமைகளும் படையினருக்கே சொந்தம் என்ற நிலைமைதான் இப்போதும் வடக்கிலும் கிழக்கிலும் நடைமுறையில் இருக்கின்றது என்பதற்கு இது ஒரு புதிய ஆதாரம்.
வலிகாமம் வடக்குப் பகுதியில் 26 வருடங்களுக்குப் பிறகு தமது சொந்த நிலம் சிறிய அளவிலானவர்களுக்கு கிடைத்ததில் மகிழச்சியாக இருந்தாலும் தாம் வாழ்ந்த வாழ்விடங்கள் காடு மண்டியும், கட்டிடங்கள் தகர்க்கப்பட்டும், தமது அடையாளங்களை இழந்து காட்சியளிப்பதைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வழிந்தது.
படையினர் விடுவித்த பகுதிகளில் உரியவர்களை வந்து குடியேறுமாறு அரசாங்க அதிபர் கூறியிருக்கின்றார். தமது நிலங்களை படையினரிடம் பறிகொடுத்து 26 வருடங்களாக அகதி முகாம்களில் துயரத்தோடு வாழ்ந்த மக்களுக்கு மீளக்குடியமர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டமும், தார்மீகப் பொறுப்பும் வலி வடக்கு மக்களின் விடயத்தில் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தைப் பொறுத்தவரை அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களை விடுவித்துள்ளது. அங்கு மீளக்குடியேற தமிழ் மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதே செய்தியாக இருக்கும். ஆனால் மக்கள் மீண்டும் குடியேறி வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. அரசாங்கம் தமிழ் மக்களின் தேவைகளை ஆராய்ந்து தேவையான எல்லாவற்றையும் ஒருபோதும் செய்ததில்லை. அதில் மஹிந்த ராஜபக்ச என்றோ, ரணில் விக்கிரம சிங்க என்றோ, மைத்திரிபால சிறிசேன என்றோ வேறுபாடுகள் எதுவுமில்லை.
அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு தேவையானதையும், தமிழ் மக்களுக்கு உரியதையும் பெற்றுக் கொடுக்கவேண்டியதும்,அதற்காக அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுப்பதும் தமிழ் தலைமைகளின் கடமையாகும். துரதிஸ்டவசமாக விடுவிக்கப்பட்ட நிலங்களை பார்வையிடுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் அங்கு சென்றார்களே தவிர மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான குறைந்;தபட்ச உறுதி மொழிகளைக்கூட மக்களுக்கு வழங்கவில்லை.
உயர்பாதுகாப்பு வலயப்பகுதியாக படையினர் கையகப்படுத்திய நிலங்களை எந்தவகையிலும் படையனர் தம்வசம் வைத்திருக்க முடியாது. பலாலி விமான நிலயத்தை விஸ்தரிப்பதற்காகவும், மயிலிட்டி இறங்குதுறையை விஸ்தரிப்பதற்காகவும், காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்காகவும் தேவை இருக்குமானால் அவசியமான நிலங்களுக்கு உரியவர்களுக்கு நஸ்டஈடுகளை வழங்கி அரசாங்கம் பெற்றுக்கொள்ளலாம்.
எந்த நியாயங்களின் அடிப்படையிலும் படையினரின் தேவைகளுக்காக மக்களின் நிலங்களை தொடர்ந்தும் வைத்திருக்கப்போவதாக அரசாங்கம் கூறுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.’ தமிழ் மக்கள் கேட்பது அவர்கள் வாழந்த சொந்த நிலங்களையே தவிர வேறு அரச காணிகளை அல்ல என்றும் அவர்களின் நிலத்தை அவர்களுக்கே வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும்’ என்றும் ஜப்பானில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி அப்படி அறிவிப்பார் ஆனால் படையினரோ தமிழ் மக்களின் நிலத்தை முழுமையாக திருப்பித்தர முடியாது என்று கூறுவார்கள். இந்த இரட்டை அணுகுமுறைதான் நல்லாட்சியாக தொடர்கின்றது. இந்த முரண்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் அரசியல் தலைமைகள் ஏனோ இதுவரை வாய் திறக்கவில்லை. சொகுசு வாகனங்கள் வந்துசேரும் வரை தமிழ் அரசியல் தலைமைகளும், மாகாண சபை உறுப்பினர்களும் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்கவோ, எதிர்ப்புக் காட்டவோ மாட்டார்கள் என்று ஒரு கருத்தும் தற்போது நிலவுகின்றது.
வட மாகாணத்தில் படையினரை தேவைக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டாம் என்றும், மக்களின் நிலங்களிலிருந்தும், சொத்துக்களிலிருந்து, மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து படையினரை அகற்ற வேண்டும் என்றும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றபோதும்,படையினரோ அசைவதாக இல்லை.
மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க முடியாது என்று கூறுகின்ற படையினரே,யாழ்ப்பாணத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க படையினர் வடக்கில் நிலைகொண்டிருப்பது அவசியம் என்றும், படையினரை தற்போதைய நிலைகளிலிருந்து அப்புறப்படுத்த முடியாது என்றும் கூறுகின்றார்கள்.
இத்தகைய முரண்பாடான புறச்சூழலை சரிசெய்து, தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு மஹிந்த ராஜபக்சவும் தவறிவிட்டார். தற்போது நல்லாட்சி நடத்துவதாகக் கூறுகின்றவர்களும் தவறுகின்றார்கள். நம்பிக்கையை தரக்கூடிய புறச்சூழல் தோற்றுவிக்கப்படாமல் தமிழ் மக்களை வெல்வது ஒருபோதும் சாத்தியமாகாது.
– ஈழத்துக் கதிரவன்.