வடக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை அமையுங்கள்


ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்  சிங்கள மக்களுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்பதனை தொடர்ச்சியாக தெளிவாகவும் அழுத்தமாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில்  அரசின் அரசியல் விருப்பின்மையை தெட்டத்தெளிவாக பிரதிபலிக்கின்றது என்று ஜெனிவா மனித உரிமை  பேரவையில்  தமிழர் தரப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 



நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் உள்ளடக்க வேண்டியதை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை திறக்க வேண்டும். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்  என்றும்  தமிழர் பிரதிநிதிகள் ஜெனிவாவில்  சுட்டிக்காட்டினர்.  

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் என்ற அடிப்படை வாக்குறுதியிலிருந்து இலங்கை அரசாங்கமானது விலகாதிருக்க,  உறுப்பு நாடுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்கும்படி நாம் அவர்களை ஆணித்தரமாக வேண்டி நிற்கின்றோம்  என்றும் அவர் குறிப்பிட்டனர்.  

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை தமிழர் பிரதிநிதிகள்  பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.  

இந்த விவாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில், 

இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறையானது நம்பகத்தன்மையற்றது என்பதால், சுயாதீனாமனதும் பக்கச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட பெரும் குற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழர்களும், இதே கரணத்திற்காகவே, பொறுப்புக்கூறல் செயன்முறைகள் உள்ளக ரீதியாக நிர்வகிக்கப்படுவதை நிராகரித்தும், சர்வதேச பொறுப்புகூறல் செயன்முறைகளையும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும்   வருகிறார்கள்.

இருந்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக இச்சபையில் (2015 ஒக்டோபர்) நிறைவேற்றப்பட்ட 30ஃ1 இலக்க தீர்மானமானது, ஏறத்தாழ ஒரு உள்ளகப் பொறிமுறையினையே வலியுறுத்துவதுடன் அதில் வெளிநாட்டு  மற்றும் பொதுநலவாய நாடுகளை சேர்ந்த நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதாக தெரிவித்து இருந்தது.

இப்படியாக, குறிப்பிடத்தக்க தளர்வுபோக்கை இலங்கை அரசுக்கு, மனித உரிமைகள் பேரவை வெளிப்படையாக காட்டியிருந்த போதிலும்,  அரசாங்கமானது (சர்வதேச பங்களிப்பை கோருகின்ற) பொறுப்புக்கூறல் செயன்முறையின் மிக அடிப்படையான விடயத்திலிருந்து பின்வாங்கிச்செல்வதில் மிகமுனைப்புடன் செயற்படுகின்றது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் தொடர்பாக இந்த அவைக்கு எந்த ஒரு வாக்குறுதியை வழங்கினாலும்,  அரசில் அவரைவிட பொறுப்பும் அதிகாரமும் மிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றவர்களே  இந்த அவைக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளை தொடர்ச்சியாக  நிராகரித்து வருகிறார்கள். அதாவது இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சிங்கள மக்களுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்பதனை தொடர்ச்சியாக தெளிவாகவும் அழுத்தமாகவும் தெரிவித்து வருகின்றனர். இச்செயற்பாடுகள், பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசின் அரசியல் விருப்பின்மையை தெட்டத்தெளிவாக பிரதிபலிக்கின்றது.

தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து குற்றவாளிகளை தப்பவைக்கும் விடயத்தில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகள், உறுதியாக இருந்து வந்துள்ளன. 

தமிழ் மக்கள், தமக்கு எதிராக இன அழிப்பு நடைபெற்றது என்ற குற்றச்சாற்றை முன் வைக்கும் நிலையில், பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் என்ற அடிப்படை வாக்குறுதியிலிருந்து இலங்கை அரசாங்கமானது விலகாதிருக்க, உறுப்பு நாடுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்கும்படி நாம் அவர்களை ஆணித்தரமாக வேண்டி நிற்கின்றோம் என்றார். 

வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற மாட்டார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது. இதனையிட்டு தமிழ் மக்கள் ஆச்சரியம் அடையவில்லை. காரணம் தமிழ் மக்கள் இலங்கையிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவில்லை. இலங்கை சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் ஐ.நா.வுக்கு வாக்குறுதியை அளித்துவிட்டு தற்போது அதனை முடியாது என்று கூறுவது என்றால் தமிழ் மக்கள் விடயத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை சிந்தித்து பாருங்கள். 

கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது இலங்கையினால் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாது என்பது தெளிவாகின்றது. சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது. தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சியாளர்கள் நல்லிணக்கம் பற்றி பேசுகின்றனர். தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படாமல், அவர்களின் அரசியல் உரிமை உறுதிப்படுத்தபடாமல் எந்தவொரு நல்லிணக்கமும் அடையப்பட முடியாது. 

எனவே நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் உள்ளடக்க வேண்டியதை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை திறக்க வேண்டும். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார். 

திருக்குலசிங்கம்

இந்த விவாதத்தில் ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவையின் வெளிவிவகார அலுவலர் டி. திருக்குலசிங்கம் உரையாற்றுகையில், 

இலங்கையில் காணி விவகாரம் விரைவாக தீர்க்கப்பட வேண்டும். அதிகளவான காணிகள் இராணுவ வசமே உள்ளன. 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகளும் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாறை கொண்டு இருக்கவில்லை. 

தற்போது அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கம் வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோதும் இன்னும் நீதிப்பொறிமுறைய எவ்வாறு அமையும் என கூறப்படவில்லை. தலைவர்கள் முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். இராணுவத்தை குறைத்தல், காணிகளை மீள் வழங்குதல், சர்வதேச விசாரணை பொறிமுறையை நிறுவுவதல் என்பன தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila