மகாபாரதத்தில் குருஷேத்திரப் போருக்கு முன்பான சில நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால் போரைத் தடுப்பதற்கு - அழிவுகளை நிறுத்துவதற்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப் பங்களை அறிந்து கொள்ள முடியும்.
போருக்கு முன்பாக துரியோதனிடம் தூது சென்றவர் கிருஷ்ண பரமாத்மா. அந்தத் தூது குருஷேத்திரப் போரை நடத்தியது கிருஷ்ண பரமாத்மாவே என்ற குற்றச்சாட்டில் இருந்து விலகிக் கொள்வதற்கான ஒரு தந்திரோபாய மாகும்.
இருந்தும் கிருஷ்ண தூதை துரியோதனன் மதித்தானன்று. கர்வம் தலைக்கேற தூது வந்த கிருஷ்ண பரமாத்மாவை ஆசனத்தில் இருந்து வீழ்த்தி ஆளை அப்புறப்படுத்தும் சின்னத்தனமே துரியோதனனிடம் இருந்தது.
தூதுவராக வந்திருப்பது குருஷேத்திரப் போரைத் தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்ட பாராளும் கண்ணன் என்பதை துரியோதனனாலும் அவன் தரப்பாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதன்விளைவுதான் குருஷேத்திரப் போராயிற்று.
இதுஒருபுறம் இருக்க, தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையை உலகறியச் செய்த தமிழர் நாம் எங்கள் பிரச்சினையை சிங்கள மக்கள் அறிவதற்கு ஏற்ற உபாயங்களையும் திட்டங்களையும் வகுக்கத் தவறிவிட்டோம்.
சிங்கள மக்கள் என்பதற்காக ஒட்டுமொத்தச் சிங்கள மக்களும் தமிழர்களுக்கு விரோத மானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வருவது மகாதவறு.
அவர்களிலும் நல்லவர்கள், மனிதநேயம் உடையவர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடி யாத உண்மை.
எனவே சிங்கள மக்களில் தமிழ் மக் களுக்குச் சார்பானவர்களை நமக்குத் துணையாகவும் தமிழர்கள் என்றவுடன் அறியாமை யால் ஆத்திரப்படும் சிங்கள மக்களைச் சந் தித்து எங்கள் பிரச்சினைகளை அவர்களு க்கு பக்குவமாக எடுத்துரைப்பதன் மூலம் அவர்களுக்கும் எங்கள் பிரச்சினைகளைப் புரியவைப்பதென்பது எங்களின் இலக்கை அடைவதற்கான ஒரு வழியாகும்.
பொதுவில் தென்பகுதியில் இருக்கக்கூடிய சிங்கள ஊடகங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எதிர்மறையான கருத்துருவாக்கத்தை தென் பகுதி மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழ் மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத - தமிழ் ஊடகங்களை பார்க்க முடியாத - தமிழ் மக்களுடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைக்காத சிங்கள மக்கள், சிங்கள ஊட கங்கள் ஊதித்தள்ளிய இனவாதத்தை உண்மை என்று கருதி அதனோடு ஒத்திசைவான மனப் பாங்குக்கு தங்களை ஆளாக்கிக் கொள்கின்றனர்.
இஃது பேரினவாத சிங்கள அரசியல்வாதிகள் தங்களின் பேரினவாத சிந்தனையை சிங்கள மக்களிடம் பரப்பி தங்களின் அரசியல் சுயலாபத்தை வெற்றிகரமாக அடைந்து கொள் வதற்கு உதவுகின்றது.
சுருங்கக்கூறின், சிங்கள ஊடகங்கள் கறையான் போல புற்றெடுக்க, சிங்கள அரசியல்வாதிகள் கருநாகம் போல புற்றில் குடியிருக்க தமிழினத்துக்கு எதிரான செயற்பாடு தடுப்பார் இன்றி விஸ்வரூபமெடுக்கின்றது.
ஆக, இதனைத் தடுப்பதாக இருந்தால் எங் கள் பிரச்சினைகள் தென்பகுதி மக்களிடம் பரப்புரை செய்யப்பட வேண்டும்.
அதன் ஒரு முக்கிய கட்டமாக பெளத்த மகா நாயக்கர்களுடனான வடக்கு முதலமைச்சரின் சந்திப்பை குறித்துரைக்க முடியும்.