யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களுக்கு அன்பு வணக்கம்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதென்று முடிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீண்டும் ஆரம்பிக்கின்ற முயற்சிகள் முன் னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சில பீடங்கள் தமது கற்றல் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன.
நிலைமை இதுவாக இருக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று கூடி தமது பிள்ளைகளுக்கான பாதுகாப்பை பொலிஸார் அல்லது இராணுவம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து,
அது தொடர்பான கடிதங்களை ஜனாதிபதி, பிர தமர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதான செய்திகள் வெளிவந்துள்ளன.
இச் செய்தியானது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டிற்கான காரணத்தை சிங்கள மாணவர்களின் பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லை என்பதும் அவர்களுக்கு வேறுவிதமாக நிலைமை சொல்லப்பட்டுள்ளது என்பதையும் உணர முடிகிறது.
உண்மையில் நிகழ்ச்சி நிரலில் இல்லாத கண்டிய நடனத்தை வரவேற்பு ஊர்வலத்தில் வேண்டுமென்றே புகுத்தியதனாலேயே மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனத்தை புகுத்தவேண்டும் என்பது ஒரு திட்டமிட்டசதி வேலை. இந்தச் சதிவேலை யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்கும் அனைத்து சிங்கள மாண வர்களுக்கும் தெரியாமல் இருந்திருந்தாலும் குறிப் பிட்ட சிங்களமாணவர்களே அதை நின்று நெறிப்படுத் தியுள்ளனர். இதன் பின்னணியில் வேறு சக்திகளும் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உண்டு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவந்த சிங்கள மாணவர்களை பயன்படுத்தி ஒரு குழப்பத்தை ஏற்படுத்த பேரினவாத சக்திகள் முயற்சிக்கின்றன என்ற உண்மையை சிங்கள மாணவர்களின் பெற்றோர்களாகிய நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.
இப் போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த ஒற்றுமையை நாம் இப்போது ஏற்படுத்தா விட்டால் எந்தக் காலத்திலும் தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமை ஏற்பட வாய்ப்பின்றிபோகும்.
இந்த நிலைமை மாணவர்களிடையே அடிக்கடி மோதல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளைகளுக்கு பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு வழங்குங்கள் என்று நீங்கள் கேட்பதானது நிலைமையை மிக மோசமாக்கும் என்பதுடன் இத்தகைய கோரிக்கைகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை இயங்காமல் செய்யும்.
ஆகையால் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களாகிய நீங்களும் தமிழ் மாணவர்களின் பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமைப்பட்டு கதைத்துப் பேசுவது நல்லது.
இவை சுமுகமான நிலைமையை குழப்ப நினைக்கும் தீய சக்திகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்குப் பேருதவியாக இருப்பதுடன் தமிழ் - சிங்கள - முஸ்லிம் பெற்றோர்களின் ஒற்றுமை, மாணவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும்.
ஆதலால் யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் - சிங்கள - முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து செயற்படுவது இன ஒற்றுமைக்கு பெரு வாய்ப்பைக் கொடுக்கும் என நம்பலாம்.