யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே இராணுவத்தினருக்கு எதிரான விசாரணை நடைபெறாதென அரசாங்கம் தெரிவித்தால், பிறகு யாருக்காக, எதற்காக விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
வவுனியாவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற, தமிழ்த் தேசிய வீரர்கள் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் தமிழ் மக்களும் தமிழ்ப் போராளிகளும் கொல்லப்பட்டால் அது தொடர்பில் விசாரணை தேவையில்லை என்பது, எழுதப்படாத சட்டமாக உள்ளதென சுரேஸ் மேலும் தெரிவித்தார்.
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு தமது ஆதரவை வழங்கிய தமிழ் மக்களுக்கு, அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல், காணாமல் போனோர் தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாமல், அதிகார பகிர்வை ஏற்படுத்தாமல் அரசாங்கம் செயற்படுவது தொடர்பில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் சிந்திக்க வேண்டுமென சுரேஸ் இதன்போது குறிப்பிட்டார்.
மொத்தத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நோக்கும்போது, யுத்தக்குற்றம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு தயாராக இல்லையென்பதையே சுட்டிக்காட்டுவதாக, சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.