தமிழ் மக்களின் எழுச்சி என்பது இப்போது அகிம்சை நிலையிலும் இராஜதந்திர வழியிலும் ஒற்றுமைப் பலத்திலும் சாத்தியமாக்கப்பட வேண்டியது.
எனினும் போருக்குப் பின்பான தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைப்பாடு ஆரோக்கியத் தன்மை கொண்டதாக இல்லை என்பதைச் சொல்லித்தானாக வேண்டும்.
இதற்குக் காரணம் என்னவெனில், தமிழினம் இன்று கன்னை பிரிந்து சுயநலத்தோடு இயங்கத் தலைப்பட்டு விட்டது என்பதுதான்.
ஒரு காலத்தில் இனப்பற்று ஒவ்வொரு தமிழனிடமும் ஆழப்பதிந்திருந்தது. ஆனால் இன்று அந்த இனப்பற்று வேரறுந்து எந்தப் பக்கம் நின்றால் எனக்குப் பணம் கிடைக்கும்; பதவி கிடைக்கும்; புகழ் கிடைக்கும் என்று பார்த்து அந்தப் பக்கம் சாயுமளவில் நிலைமை மாறிவிட்டது.
இதனால் தமிழ் இனத்தில் யாரை நம்புவது யாரை நம்பாமல் விடுவது என்பதே பெரிய குழப்பமாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழினத்தை பெரும்பான்மை இனம் மட்டுமன்றி தமிழரிலும் சிறுபான்மையாக இருக்கக்கூடிய முஸ்லிம் அரசியல் தலைமைகளும் நசுக்கத்தலைப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீனின் அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சிங்கள பேரினவாதத்தை விட ஒருபடி மேலாக நின்று தமிழினத்தை வஞ்சிக்க அவர் தலைப்பட்டுள்ளமை தெரிகிறது.
ஊடகங்களில் நடத்தப்படுகின்ற நேர்காணல் நிகழ்ச்சிகளில் கூட அமைச்சர் றிசாத் பதியுதீன், தமிழ் அரசியல் தலைவர்களை நாகரிகமற்ற முறையில் - அடிப்படைக் கெளரவங்களையும் மறந்து பேசுவதைக் காணமுடிகின்றது.
இத்தகைய இடங்களில் தமிழ் மக்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர் என்ற உண்மையை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணம் அவர் ஆளும் தரப்புடன் சேர்ந்து அமைச்சராக இருப்பது என்பதற்கு அப்பால், முஸ்லிம் மக்களின் நலன்பற்றி முழுமையாக அக்கறை கொண்டிருப்பதும் காரணம் எனலாம்.
அதாவது முஸ்லிம் மக்களை பொறுத்தவரை அமைச்சர் றிசாத் பதியுதீனை தங்களுக்கான ஒரு முக்கிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதற்கேற்றாற்போல் தனது அலுவலகத்தில் அமைச்சர் றிசாத் முஸ்லிம் மக்களைச் சந்திப்பது, அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, வேலைவாய்ப்புகளை வழங்குவது, முஸ்லிம் மக்களை குடியமர்த்துவது என்ற பல்வேறு விடயங்களில் மிகவும் திட்டமிட்டு கரிசனையுடன் செயற்பட்டு வருவதை காணமுடிகின்றது.
இதனால் அவருக்கான முஸ்லிம் மக்களின் ஆதரவும் தாராளமாக உண்டு.
ஆனால் எங்கள் அரசியல் தலைமை அரசுடன் சேர்ந்து அரசுக்கு உதவி செய்து தமிழ் மக்களுக்கு கேடு இழைக்கிறது.
கூடவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இங்கு கூட்டிவந்து; போர்க் குற்ற விசாரணை சாத்தியமற்றது; அதைக் கைவிட வேண்டும்; எதிலும் விடாப்படியாக நிற்காமல் அரசுடன் சேர்ந்து போக வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறவைக்கிறது எனில் எங்கள் தமிழ் அரசியல் தலைமையின் போக்கு எவ்வாறாக உள்ளது என்பதை உணர முடிகின்றதல்லவா?
ஆக, அமைச்சர் றிசாத் பதியூதீனை பார்த்தேனும் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு தமிழினத்தைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.