அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்கும் செயற்பாட்டை மக்களே செய்யவேண்டும்
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்கும் செயற்பாட்டை மக்களே செய்யவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தலைமைகள் இதனை செய்யுமென்ற நம்பிக்கையில்லை என தெரிவித்த அவர், இதனை மக்கள் செய்துகாட்ட வேண்டுமென குறிப்பிட்டார். யாழ்.கந்தர்மடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். தமிழ் இன அழிப்பின் முக்கிய அங்கமாக கருதப்படும் ராஜபக்ஷ, தமிழ் மக்களின் உரிமை சம்பந்தப்பட்ட அரசியல் தீர்வு விடயத்தை நிராகரிப்பதும், தமிழ் மக்கள் இருப்பை தக்கவைக்கும் ஒவ்வொரு விடயத்தையும் அழித்துக்கொண்டிருக்கும் வகையில் செயற்படுவதாலேயே, தமிழ் மக்களின் எதிரியாக கருதப்படுகிறார் என இதன்போது கஜேந்திரகுமார் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்த்துள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தாருக்கும் இராணுவத்தினருக்கும் எதிராக விசாரணைகளை முன்னெடுக்க மாட்டோம் என அரசாங்கம் கூறுவதானது, இந்த அரசாங்கத்திலும் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதையே காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் தொடர்பில் வெற்றுக்கோஷங்களாக இருக்கும் குற்றச்சாட்டுக்களை கைவிட்டு விட்டு, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்கவேண்டியது, தமிழ் மக்கள் கைகளிலேயே உள்ளதென கஜேந்திரகுமார் இதன்போது குறிப்பிட்டார்.
Related Post:
Add Comments